சென்னை: ஆம்னி பேருந்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட புகாரை அடுத்து ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி தனியார் பேருந்துகளில் பயணிக்க கூடிய பொதுமக்களிடம் அதிகமான கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளை பற்றி தகவல் தெரிவிக்க தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கிழக்கு கடற்கரை சுங்கச்சாவடியில் பயணிகளிடம் தனியார் பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர். இதனையடுத்து, திருவான்மியூர் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிவேல் தலைமையில் அதிகாரிகள் தனியார் பேருந்துகளில் தொடர் சோதனையில் ஈடுபட்டனர்.
அதில் 25 தனியார் பேருந்துகள் பிடிக்கப்பட்டு, 11 பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்ததது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அந்த பேருந்துகளுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இது போன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
