×

உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் குழுவில் 5 நீதிபதிகளுக்கு பதில் 6 பேர் ஏன்? முதன்முறையாக புதிய நடைமுறை அறிமுகம்

புதுடெல்லி: உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் குழுவில் 5 நீதிபதிகளுக்கு பதில் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய நடைமுறை உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை, ‘கொலிஜியம்’ எனப்படும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் குழு பரிந்துரைத்து நியமிக்கும். இந்த நடைமுறை 1998ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. கொலிஜியம் முறையில் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக ஒன்றிய அரசின் சட்ட அமைச்சர் சமீபத்தில் விவாதத்துக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கொலிஜியம் குழுவில் இருக்கும் 5 நீதிபதிகள் என்ற நடைமுறைக்கு பதிலாக 6 நீதிபதிகள் குழு நடைமுறை முதன்முதலாக அமலுக்கு வரவுள்ளது. இன்றைய நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், கொலிஜியம் குழுவின் தலைவராக உள்ளது. இவர் அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஓய்வுபெற உள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட், வரும் நவம்பர் 9ம் தேதி பதவியேற்க உள்ளார். 2024ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி ஓய்வுபெறுவார். நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 பேர் கொண்ட கொலிஜியம் குழுவில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப், எஸ்.ஏ.நசீர், எம்.ஆர்.ஷா ஆகிய நான்கு பேரும் உள்ளனர்.

இவர்கள் நான்கு பேரும் டி.ஒய்.சந்திரசூட் ஓய்வு பெறுவதற்கு முன்பே ஓய்வு பெற்றுவிடுவார்கள். இவர்களில் எவரும் உச்சநீதிமன்றத்தின் அடுத்த புதிய தலைமை நீதிபதியாக முடியாது. அதனால், நீதிபதிகள் நியமன சட்டவிதிகளின்படி கொலிஜியத்தில் இருக்கும் நீதிபதிகளில் ஒருவர் தான், அடுத்த தலைமை நீதிபதியாக முடியும். அப்படி பார்த்தால் இப்போது இருக்கும் நான்கு நீதிபதியுடன் அடுத்த சீனியாரிட்டியில் உள்ள நீதிபதியை கொலிஜியம் குழுவில் சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கான சட்டவிதிகளும் கொலிஜியத்தில் உள்ளன.

அதன்படி நீதிபதி சந்திரசூட்டுக்கு பின்னர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக வருவதற்கு, உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா தகுதி பெறுகிறார். அதனால், அவரே குழுவின் 6வது நீதிபதியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவரும் 2024ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதிக்கு பின்னர் தான் அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக முடியும். இவர் தலைமை நீதிபதியாகும் காலத்தில் சீனியாரிட்டி அடிப்படையில் பார்த்தால், கொலிஜியம்  குழுவில் நீதிபதி பி.ஆர்.கவாய் இடம்பெறுவார். இவர் அதற்கடுத்த தலைமை நீதிபதியாக வரவாய்ப்புள்ளது. அந்த காலகட்டத்தில் மீண்டும் கொலிஜியம் குழுவில் தற்போதுள்ள நடைமுறையின்படி 5 நீதிபதிகள் இடம்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Committee ,Supreme Court , Why are there 6 judges instead of 5 in the collegium committee that appoints Supreme Court and High Court judges? Introducing the new procedure for the first time
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...