×

வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்ற விவகாரம்: ராஜீவ் காந்தி அறக்கட்டளை உரிமம் ரத்து.! ஒன்றிய அரசு திடீர் உத்தரவு

புதுடெல்லி: சோனியா காந்தியின் குடும்பத்தார் நடத்தும் ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் உரிமத்தை ரத்து செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி குடும்பத்தார் நடத்தும் ராஜீவ் காந்தி நினைவு அறக்கட்டளை, இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை, ராஜீவ் காந்தி அறக்கட்டளை ஆகிய 3 அமைப்புகளும் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றதாகவும், அதில் விதிமீறல்கள் நடந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் தலைவராக சோனியா காந்தியும்,  உறுப்பினர்களாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி, ராகுல்  காந்தி ஆகியோர் உள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பாக, விதிமுறை மீறல் ஏதும் நடந்துள்ளதா என்பதை அறிய ஒன்றிய அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவை ஒன்றிய அரசு கடந்த 2020ம் ஆண்டு அமைத்தது. அதன் அடிப்படையில் வௌிநாட்டில் இருந்து பெறப்பட்ட நிதி, நன்கொடை தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். அமலாக்கத்துறையின் சிறப்பு இயக்குநர் தலைமையில் மேற்கண்ட விசாரணைகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், வெளிநாட்டில் இருந்து நிதி மற்றும் நன்கொடை பெறுவதில் விதிமுறைகளை மீறியதாக ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் (கடந்த 1991ம் ஆண்டு ஜூன் 21ல் தொடங்கப்பட்டது) உரிமத்தை ரத்து செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் ராஜீவ் காந்தி அறக்கட்டளை மற்றும் ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் பதிவு ரத்து செய்யப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் உறுப்பினர்களாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா, மாண்டக் சிங் அலுவாலியா, சுமன் தூபே, அசோக் கங்குலி ஆகியோர் இருக்கின்றனர். ராஜீவ் காந்தி அறக்கட்டளையை பொறுத்தவரை 5 விஷயங்களை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வந்தது. அதாவது, இலக்கியம் சார்ந்த பணிகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை அதிகாரமளித்தல், விண்வெளித் துறையில் புதுமை, வலுவான சிந்தனையை நிறுவுதல் ஆகியவை ஆகும். இதன் தலைமை அலுவலகம் டெல்லி ஜவஹர் பவனில் செயல்பட்டு வந்தது. தற்ேபாது ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் உரிமத்தை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளதால் காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


Tags : Rajiv Gandhi Foundation ,Union Government , The issue of receiving donations from foreign countries: The license of Rajiv Gandhi Foundation has been revoked. Union Govt Sudden Order
× RELATED எதிர்க்கட்சி எம்பி என்பதால் ஒன்றிய...