×

கொள்ளிடம் அருகே தற்காஸ் கிராமத்தில் பக்கிங்காம் கால்வாய் வழியே வெள்ளநீர் புகுந்ததால் நேரடி நெல் விதைப்பு பாதிப்பு: குடியிருப்புகளையும் தண்ணீர் சூழ்ந்தது

கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் கடந்த 6வது நாளாக, 6 வது முறையாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தை ஒட்டி முகத்துவாரம் வழியே சென்று வங்க கடலில் கலந்து வருகிறது.  கொள்ளிடம் அருகே பழையாறு சுனாமி குடியிருப்பு அருகில் உள்ள பக்கிங்காம்கால்வாய் வழியே கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் தொடர்ந்து சென்று கொண்டிருப்பதாலும், கடல் சீற்றத்தாலும் கடலுக்குள் தண்ணீர் மெதுவாகவே செல்வதால் கொள்ளிடம் ஆற்று நீர் பக்கிங்காம் கால்வாயில் புகுந்து கரையின் வழியே வெளியேறி, பழையாறு சுனாமி குடியிருப்பு பகுதியை சூழ்ந்துள்ளது. அதனைத் தொடர்ந்து தற்காசு, புளியந்துறை மற்றும் புதுப்பட்டினம் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 1100 ஏக்கர் சம்பா நேரடி விதைப்பு பயிரில் தண்ணீர் புகுந்ததால் நெற்பயிர் மூழ்கியுள்ளது.

தண்ணீரில் நேரடி விதைப்பு நெற்பயிர் மூழ்கியுள்ளதால் அழுகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து அதிக நீர் சென்று கொண்டிருப்பதாலும் வயல்களில் தேங்கியுள்ள தண்ணீர் ஆற்றுக்குள் சென்று வடியாத நிலை ஏற்பட்டதாலும் கொள்ளிடம் அருகே உள்ள நாதல்படுகை, சந்தபடுகை, திட்டுபடுகை,நாணல் படுகை, அனுமந்தபுரம், மகேந்திரபள்ளி,காட்டூர்,அளக்குடி, கோரைதிட்டு, புளியந்துறை,மேலவாடி உள்ளிட்ட கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களில் மொத்தத்தில்10 ஆயிரம் ஏக்கர் நேரடி விதைப்பு செய்திருந்த நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

நேரடி நெல் விதைப்பு செய்து 20 முதல் 25 நாட்களே ஆன நிலையில் தொடர்ந்து நேரடி விதைப்பு பயிரை தண்ணீர் சூழ்ந்து மூழ்கடித்துள்ளதால் நெற்பயிர் அழுகிக் கொண்டிருக்கிறது. இதனால் விவசாயிகள் பெரும் வேதனையில் இருந்து வருகின்றனர். நெற்பயிர் சாகுபடி செய்வதற்கு கடன் வாங்கி நேரடி விதைப்பு செய்திருந்தனர். ஆனால் அவர்கள் நினைத்ததற்கு மாறாக கொள்ளிடம் ஆற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து தண்ணீர் அதிகப்படியாக சென்று கொண்டிருக்கிறது. எனவே அதிகாரிகள் தண்ணீரில் மூழ்கிய பயிர்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கொள்ளிடம் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் சிவப்பிரகாசம்பிள்ளை தெரிவித்தார்.

மேலும் நேற்று முன்தினம் கொள்ளிடம் ஆற்றில் சென்று கொண்டிருந்த தண்ணீர் வரத்து குறைந்ததால் நாதல்படுகைை, முதலைமேடு திட்டு,வெள்ளமணல் ஆகிய திட்டு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மீண்டும் கிராமங்களில் உள்ள அவரவர்களின் வீட்டிற்கு சென்று வீடுகளை சுத்தம் செய்து வந்தனர். தீபாவளி திருவிழாவை கிராமங்களில் அவர்களின் வீடுகளில் இருந்தே கொண்டாடி விடலாம் என்றும் நினைத்தனர். ஆனால் கிராம மக்கள் நினைத்தபடி அப்பகுதியில் உள்ள வீடுகளில் தங்க முடியாத அளவுக்கு மீண்டும் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து வருகிறது.

இந்த தண்ணீர் படிப்படியாக அதிகரித்து இன்று இரண்டு லட்சம் கன அடி அளவுக்கு கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீன்பிடித்து துறைமுகத்தை ஒட்டி வங்க கடலில் கலப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் கொள்ளிடம் வட்டார பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கிராம மக்கள் மிகுந்த சிரமத்தையும், வேதனையையும்,பெரும் நஷ்டத்தையும் சந்தித்து வருகின்றனர்.

Tags : Buckingham Canal ,Dartas ,Kodu , Direct paddy sowing affected due to flood water entering through Buckingham Canal in Dhikkas village near Kollidam: Water engulfed residences
× RELATED திடீர் தீ விபத்தில் 10 ஏக்கர்...