×

ஏரலில் சேதமடைந்து கிடக்கும் பழைய தாம்போதி ஆற்றுப்பாலம் சீரமைக்கப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஏரல்: ஏரலில் சேதமடைந்து கிடக்கும் பழைய தாம்போதி ஆற்றுப்பாலத்தை சீரமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் வியாபார ஸ்தலத்தில் மூன்றாவது பெரிய வணிக நகரமாக ஏரல் உள்ளது. இங்கு தொழில் மற்றும் வியாபாரத்திற்காக நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். மழைக்காலத்தில் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் அதிகமாக வரும்போது இங்குள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கி ஏரல்-குரும்பூர் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் மாணவ, மாணவிகள் சிரமப்பட்டு வந்தனர்.
 
இதையடுத்து அரசு நடவடிக்கை எடுத்து பழைய தாம்போதி பாலம் அருகிலேயே ரூ.16 கோடியே 50 லட்சம் செலவில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் புதிய மேல்மட்ட பாலம் கட்டப்பட்டு அதில் போக்குவரத்து நடந்து வருகிறது. இதனால் பழைய தாம்போதி பாலத்தை பராமரிக்காமல் அப்படியே போட்டுவிட்டனர். இதன் காரணமாக பழைய தாம்போதி பாலம் தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் அரிப்பு ஏற்பட்டு உடைந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக உள்ளது. இதனால் ஏரல் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் பழைய தாம்போதி பாலத்தினை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் இந்த பழைய தாம்போதி பாலம் தான் தடுப்பணை போல் தண்ணீரை இப்பகுதியில் சேமித்து வைத்துள்ளது.

எனவே பொதுமக்கள் நலன் கருதி ஏரல் பழைய தாம்போதி பாலத்தில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் கான்கீரிட் போட்டு சீரமைத்து அதனையும் போக்குவரத்திற்கு கொண்டு வர வேண்டும் என ஏரல் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது; தாமிரபரணி ஆற்றில் முக்காணி மற்றும் வல்லநாடு பகுதியில் புதிய பாலம் கட்டப்பட்டு அதில் போக்குவரத்து நடந்து வந்த போதிலும் பழைய பாலத்தினை அப்படியே போட்டுவிடாமல் சீரமைத்து அதிலும் போக்குவரத்து இன்று வரை நடந்து வருகிறது.

ஏனெனில் புதிய பாலத்தினை விட பழைய பாலம் மிகவும் உறுதியாக உள்ளது. ஆனால் ஏரலில் மட்டும் புதிய பாலம் வந்தவுடன் பழைய பாலத்தை பராமரிக்காமல் அப்படியே போட்டுவிட்ட நிலையில் பாலம் உடைந்து அதில் போக்குவரத்து நடைபெறாமல் உள்ளது. எனவே அரசு நடவடிக்கை எடுத்து ஏரலில் உடைந்து கிடக்கும் பழைய தாம்போதி பாலத்தையும் சீரமைத்து அதிலும் போக்குவரத்து நடைபெறுமாறு ஏற்பாடு செய்து தர வேண்டும்’ என கூறியுள்ளனர்.

Tags : Dhampoti river bridge ,Eral , Will the damaged old Dhampoti river bridge in Eral be repaired?: public expectations
× RELATED திருச்செந்தூர் கோயிலில் புதுமண...