×

திருமுருகன்பூண்டி சிற்பக்கலைக் கூடத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பத்து தலை காளி சிலை: கர்நாடகாவுக்கு இன்று பயணம்

திருப்பூர்: திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் 100-க்கும் மேற்பட்ட சிற்பக் கலைக்கூடங்கள் உள்ளன. அங்கு கல்லில் செதுக்கப்படும் சாமி சிலைகள் இந்தியா முழுவதும் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், திருமுருகன்பூண்டியில் உள்ள ஒரு சிற்பக்கலைக்கூடத்தில் 12 அடி உயரத்தில், பல்வேறு சிறப்பம்சங்களுடன் கொல்கத்தா காளி சிலை செதுக்கப்பட்டுள்ளது.

அந்த சிலை 6 டன் எடையுடன் ஒரே கல்லில், 10 தலைகள், 10 கால்கள், ஏகசூலம், சங்கு, கதை, ரத்த கிண்ணம், கதிர் அரிவாள், அரக்கன் தலை, கத்தி, சாட்டை, வில் அம்பு, டமாரம் என 10 கைகளிலும் 10 ஆயுதங்களுடன் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், காளி சிவன் ரூபத்தில் வந்து கொடூர அரக்கனை காலடியில் போட்டு மிதிப்பது போன்றும் சிலை செதுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, காளிக்கு 20 மனித தலைகள் கொண்ட மாலை அணிவித்திருப்பது போன்ற தோற்றத்துடன் சிலை சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. சிற்பி சிவக்குமார் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் 6 மாதங்களில் இந்த சிலை வடிவமைப்பு பணியை நிறைவு செய்துள்ளதாக தெரிவித்தனர். இந்த சிலை இன்று (23ம் தேதி) திருமுருகன்பூண்டியில் இருந்து கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள சாந்திராம கிராமத்தில் உள்ள கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக லாரி மூலமாக எடுத்து செல்லப்படுகிறது.

Tags : Kali ,Thirumuruganpoondi Sculpture Centre ,Karnataka , Ten Headed Kali Idol Carved in One Stone at Tirumuruganpoondi Sculpture Centre: Travel to Karnataka Today
× RELATED கள்ளத்தொடர்பு ரவுடித்தனம் செய்த அதிமுக நிர்வாகி கைது