திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுதினம் தொடக்கம்: 30ம் தேதி சூரசம்ஹாரம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா, நாளை மறுதினம் (25ம் தேதி) தொடங்குகிறது. வருகிற 30ம் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2வது படை வீடாகத் திகழும், பிரசித்திப் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுதினம் (25ம் தேதி) துவங்குகிறது. அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளுகிறார்.

காலை 6 மணிக்குள் யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. யாகசாலையில் சுவாமி  ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானை அம்பாள் எழுந்தருளியதும் பூஜைகள்  நடைபெறும். பகலில் உச்சிகால தீபாராதனைக்கு பிறகு வேள்விசாலை தீபாராதனை  நடக்கிறது. தொடர்ந்து வேள்விசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர்  தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி வீரவாள் வகுப்பு, வேல் வகுப்பு முதலிய  பாடல்களுடன் மேளவாத்தியங்களுடனும் சண்முக விலாசம் சேர்ந்து தீபாராதனை  நடைபெறுகிறது. தினமும் காலை, இரவு வேள்வி சாலை பூஜை நடக்கிறது. தொடர்ந்து  மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை மற்றும் கால பூஜைகள் நடக்கிறது.

விழாவின்  முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 30ம் தேதி நடக்கிறது. அன்று மாலை 4  மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளுகிறார். சூரனை  சம்ஹாரம் செய்த பிறகு சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும்  அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. 31ம் தேதி காலை 5 மணிக்கு தெய்வானை  அம்பாள் தபசு காட்சி புறப்படுதல், மாலை 3 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி  எழுந்தருளி 6.30 மணிக்கு 5ம் சந்தியில் அம்பாளுக்கு சுவாமி காட்சியருளி  தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவில் சுவாமி - தெய்வானை அம்பாள்  திருக்கல்யாணம் நடக்கிறது.

25ம் தேதி சூரிய கிரகணம் இருப்பதால் மாலை 4 மணிக்கு சுவாமிகளுக்கு பட்டுசாத்தி கோயில் நடைசாத்தப்படும். மாலை 6.45 மணிக்கு நடை திறக்கப்பட்டு மற்ற காலங்கள் மற்றும் யாகசாலை பூஜை தொடர்ந்து நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர்  அருள்முருகன், இணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு), அன்புமணி, அறங்காவலர்கள்  அனிதாகுமரன், கணேசன், செந்தில்முருகன், ராமதாஸ் ஆகியோர் செய்து  வருகின்றனர்.

Related Stories: