தீபாவளிக்கு செல்லும் தென் மாவட்ட மக்களால் தாம்பரம் முதல் அச்சிறுப்பாக்கம் வரை ஜிஎஸ்டி சாலையில் கடும் நெரிசல்: பல கி.மீ. வாகனங்கள் அணிவகுப்பு

தாம்பரம்: தீபாவளிக்கு செல்லும் தென் மாவட்டங்களை சேர்ந்த மக்களால் தாம்பரம் முதல் அச்சிறுப்பாக்கம் வரை ஜிஎஸ்டி சாலையில் பல கி.மீ. தூரம் வாகனங்கள் அணிவகுத்தன. இதனால், சுங்கச்சாவடிகள் உள்பட பல இடங்களில் மணிக்கணக்கில் வாகன ஓட்டிகள் சிக்கித் தவித்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தென் மாவட்டங்களில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு நேற்று முன்தினம் முதல் பொதுமக்கள் செல்ல தொடங்கியுள்ளனர். இதனால், ஏராளமானோர் சென்னையிலிருந்து சொந்த வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ரயில்கள் மூலம் புறப்பட்டு செல்கின்றனர்.

இதில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் அனைத்திலும் முன்பதிவு முடிந்துவிட்ட நிலையில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் ஏறி செல்வதற்காக நேற்று முன்தினம் மாலை முதல் ஏராளமான பொதுமக்கள் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து ரயில்கள் மூலம் சென்றனர். இதனால், தாம்பரம் நிலையத்தில் கடுமையான கூட்டம் காணப்பட்டது. அதேபோல், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் பேருந்து நிலையத்திற்கு படையெடுத்து வருகின்றனர். இதில் திருவண்ணாமலை, போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி செல்லும் பேருந்துகளும், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகளும் சானடோரியம், தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் இருந்து பொதுமக்களை ஏற்றிச் செல்கிறது.

இதனால், குரோம்பேட்டை, சானடோரியம், தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (சனிக்கிழமை) மற்றும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாட்கள் என்பதால் சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதன.

இதனால் கூடுதலாக போலீசாரை போக்குவரத்து சீர் செய்யும் பணிகளில் ஈடுபடுத்துவதோடு, தென் மாவட்டங்களுக்கு தங்களது சொந்த வாகனங்கள் மூலம் செல்லும் பொதுமக்கள் தாம்பரம் ஜிஎஸ்டி சாலை வழியாக செல்வதற்கு பதிலாக இசிஆர் சாலை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஜிஎஸ்டி சாலையில் அணிவகுப்பதால் கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில் உள்ள இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் போன்ற அவசர ஊர்திகள் செல்ல முடியாமல் சிக்கின.

சிங்கபெருமாள் கோவிலில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை சரி செய்ய காவல்துறை சார்பில் 20க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். கடும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், பரனூர் சுங்கச்சாவடியில் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய 6 பூத்துகளும் திறக்கப்பட்டு பாஸ்டேக் மூலம் வாகனங்களை போலீசார் மற்றும் டோல்கேட் ஊழியர்கள் துரிதமாக அனுப்பி வருகின்றனர். இருப்பினும், சிங்கபெருமாள் கோவில் மற்றும் பரனூர் சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும், தீபாவளி கொண்டாட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்களால் வாகனங்கள் சென்னை கோயம்பேட்டில் இருந்து பெருங்களத்தூர் வரவே பலமணி நேரம் தாமதம் ஏற்படுகிறது. இதனால், கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் சென்னைக்குள் வர முடியாமல் திணறுகின்றனர். குறிப்பாக, சென்னை-திருச்சி நெடுஞ்சாலை வழியாக நேற்று முன்தினம் முதல் அதிக அளவில் பொதுமக்கள் பயணித்து வருகின்றனர். அவர்கள் கார், வேன், பஸ் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் சென்றனர்.

நேற்று அதிகாலை முதல் அதிக வாகனங்கள் அணிவகுத்ததால்  ஆத்தூர் டோல்கேட் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பைக் தவிர்த்து மற்ற வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்திய பிறகே செல்லவேண்டும் என்பதால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதன்காரணமாக அச்சிறுப்பாக்கம் நோக்கி சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், மதுராந்தகம் போக்குவரத்து போலீசார், அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய போலீசார் வந்து போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக கார், பைக்கில் பயணம் செய்யும் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என்று பல தரப்பினரும் கடும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

Related Stories: