காவலர் வீரவணக்க நாளில் கட்டுரை போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு: தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் வழங்கினார்

தாம்பரம்: காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, கட்டுரை போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவர்களுக்கு தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் பரிசு வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் நம் தேசம் எங்கும் பணியின்போது உயிர்த்தியாகம் செய்த காவலர்களுக்காக காவலர் வீரவணக்கநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, பள்ளி மாணவர்கள் மத்தியில் நம் காவல்துறை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “மாநில வளர்ச்சியில் காவல் துறையின் பங்கு” என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும், வண்ணம் தீட்டுதல் போட்டியும் நடத்தப்பட்டது.

இதில், தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் போட்டிகள் நடந்தன. பள்ளி மாணவர்கள் ஏராளமானவர்கள் பங்கேற்று காவலர்களின் பணிகளை இக்கால மாணவ சமுதாயம் எப்படி புரிந்து வைத்துள்ளது என்பதை தங்கள் கட்டுரையின் மூலம் வெளிப்படுத்தினர். குறிப்பாக, பெண்கள் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட காவலன் ஆப் குறித்தும், விடுமுறை இல்லாமல் வாரம் முழுவதும் வேலை செய்து வந்த காவலர்களுக்கு தற்போது வாரத்தில் ஒருநாள் விடுப்பு வழங்கி உள்ளதை வரவேற்று, இந்த ஓய்வு அவர்களுக்கு புது தெம்பைக் கொடுப்பதோடு மாநில வளர்ச்சியில் கூடுதலாக பங்களிக்க முடியும் என்பதோடு, மழை, புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் விரைந்து சென்று தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து காவலர்கள் உதவி செய்கின்றனர் என தங்கள் கட்டுரைகளில் குறிப்பிட்டு இருந்தனர்.

மேலும், மாணவர்கள் அனைவரும் சட்டம்- ஒழுங்கு விதிமுறைகளை கடைபிடித்து காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என உறுதிமொழியையும் ஏற்றுக்கொண்டனர்.  இந்த கட்டுரை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் பரிசு வழங்கினார். இப்போட்டியில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்க உதவிய சீயோன் மற்றும் ஆல்வின் பள்ளிகளின் தலைவர் விஜயன் மற்றும் பள்ளியின் இயக்குனர்கள் ஆல்டஸ் ஹக்ஸ்லி, ரேச்சல் ஜோர்ஜியானா ஆகியோருக்கும் அமல்ராஜ் பாராட்டு தெரிவித்தார்.

Related Stories: