ரூ.3,000க்கு ரூ.15,000 மதிப்பு பொருட்கள் வழங்குவதாக தமிழகம் முழுவதும் ரூ.1,000 கோடி தீபாவளி பண்டு வசூலித்து மோசடி: ‘சதுரங்க வேட்டை’ படம் பாணியில் கைவரிசை; பேராசையால் முதலீட்டாளர்களுக்கு பெரு நஷ்டம்

செய்யாறு: ரூ.3 ஆயிரத்துக்கு ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் வழங்குவதாக கூறி தீபாவளி பண்டு ரூ.1,000 கோடி வசூலித்து மோசடி செய்தவர்கள் ஓட்டம் பிடித்ததால், முதலீட்டாளர்கள் 10 லட்சம் பேர் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தமிழில் ‘சதுரங்க வேட்டை’ சினிமா படத்தில் மக்களை ஏமாற்ற முதலில் அவர்களது ஆசையை தூண்ட வேண்டும் என்று டயலாக் வரும்.

இதே தந்திரத்தை பயன்படுத்தி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் ஆரணி கூட்ரோடு மற்றும் ஆற்காடு சாலை லோகநாதன் தெருவில் அரசு மகளிர் பள்ளி அருகில் செயல்பட்டு வந்த தீபாவளி பண்டு நடத்திய நிறுவனங்கள் அதிகளவில் பொருட்களை தருவதாக கூறி வசூலில் ஈடுபட்டுள்ளது. ஆரம்பத்தில் ஒரு சிலர் மட்டுமே முதலீடு செய்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக குறிப்பிட்ட நேரத்துக்கு பொருட்களை வாரி வழங்கியுள்ளனர். இதற்காக ரூ.3 ஆயிரம் தவணை தொகையாக கட்டினால், தீபாவளிக்கு ரூ.15,000 மதிப்புள்ள பொருட்கள் தருவதாகவும், ரூ.50,000 கட்டினால் இரண்டரை சவரன் தங்க நகை, வெள்ளி நகைகள் பாத்திர பண்டங்கள், கிப்ட் பொருட்கள் தருவதாகவும் கவர்ச்சிகர விளம்பரங்களை அள்ளி வீசினர்.

கடந்த 2 ஆண்டுகளாக அனைவருக்கும் பொருட்களை வாரி வழங்கியதால் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதன் மூலம் இந்தாண்டு சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் ரூ.1,000 கோடி வரை முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் செய்யாறு பகுதியில் மட்டும் ரூ.200 கோடிக்கு வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், முதலீடு பெற்ற நிறுவன உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் திடீரென பொருட்களை வழங்காமல் ஓட்டம் பிடித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர். மேலும் முதலீட்டாளர்களிடம் வசூல் செய்த ஏஜென்டுகளும் செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர். எனவே பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலீட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: