×

தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமியின் வளர்ப்பு மகன் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையாவுக்கு தரப்பட்ட வாரிசு சான்றிதழ் சரிதான்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மறைந்த தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமியின் வளர்ப்பு மகன் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையாவுக்கு வாரிசு சான்றிதழ் வழங்கியதை எதிர்த்து தொழிலதிபர் ஏ.சி.முத்தையா தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து  உத்தரவிட்டுள்ளது. செட்டிநாடு அறக்கட்டளை சார்பில் அதன் நிர்வாக அறங்காவலர் டாக்டர்.ஏ.சி.முத்தையா கடந்த 2016ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், டாக்டர் எம்.ஏ.எம்.ராமசாமி வாழ்ந்த காலத்தில் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா மயிலாப்பூர் தாசில்தார் முன்பு வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தபோது நானும் டாக்டர் மீனா முத்தையா உள்ளிட்டோரும் வாரிசு சான்று வழங்க எதிர்ப்பு தெரிவித்தோம்.  

ஆனால், மயிலாப்பூர் தாசில்தார் வாரிசு சான்றிதழ் வழங்கினார். எனவே, எம்.ஏ.எம்.ஆர்.முத்தையாவுக்கு தரப்பட்ட வாரிசு சான்றிதழை ரத்து செய்யவேண்டும் என்று கோரியிருந்தார். உயர் நீதிமன்றத்தில் 5 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில் மயிலாப்பூர் தாசில்தார் சார்பில் தாக்கல்  செய்யப்பட்டிருந்த பதில் மனுவில், ஏ.சி.முத்தையா மற்றும் மீனா முத்தையா ஆகியோர் நேரில் ஆஜராகாமல் வழக்கறிஞர் மூலமே எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்தனர். எதிர்ப்பு மனுவில் தத்து எடுத்ததை டாக்டர்.எம்.ஏ.எம்.ராமசாமி ரத்து செய்து விட்டதாக தெரிவித்தாலும் அதற்கான ஆவணத்தை தாக்கல் செய்யவில்லை.

அனைத்து ஆவணங்களையும் தீவிரமாக பரீசிலித்தே வாரிசு சான்றிதழ் வழங்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இறுதி விசாரணை நீதிபதி சதீஷ்குமார் முன்பு வந்தபோது, மனுதாரர் ஏ.சி.முத்தையா சார்பில் வழக்கறிஞர் ஆர்.ஸ்ரீனிவாஸ் ஆஜராகி, வாதிட்டார்.எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா சார்பில் மூத்த வழக்கறிஞர் எம்.எம்.கிருஷ்ணன் ஆஜராகி, எம்.ஏ.எம்.ஆர்.முத்தையாவுக்கு வாரிசு சான்றிதழ் வழங்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர மனுதாரருக்கு உரிமையில்லை. வாரிசு சான்றிதழ் வழங்கப்பட்டதை எதிர்த்து மனுதாரர் எந்த சிவில் வழக்கையும் தொடரவில்லை. மூன்றாம் நபர் இதுபோன்ற வழக்கை தொடர முடியாது என்று வாதிட்டார். தாசில்தார் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வி.அருண் ஆஜராகி, எம்.ஏ.எம்.ஆர்.முத்தையாவுக்கு வாரிசு சான்றிதழ் வழங்கியதில் தாசில்தார் உரிய சட்ட நடவடிக்கைகளை பின்பற்றியுள்ளார்.

சான்றிதழ் வழங்குவதற்கு முன்பு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்பிறகுதான் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.வழக்கை விசாரித்த நீதிபதி, ‘‘சட்ட விதிகளுக்கு உட்பட்டே வாரிசு சான்றிதழ் தரப்பட்டுள்ளது.  15 வயதை கடந்தவர்களை தத்து எடுக்க கூடாது என்ற தடை எதுவும் இல்லை. சட்ட விதிகளுக்கு உட்பட்டு தரப்பட்ட வாரிசு சான்றிதழ் தவறு என்று கூற முடியாது. டாக்டர் எம்.ஏ.எம்.ராமசாமி எழுதியுள்ள உயில் தொடர்பாக மனுதாரர் உரிமை கோருவதாக இருந்தால் அவர் உரிமையியல் நீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும். வாரிசு சான்றிதழை பொறுத்தவரை தாசில்தார் குடும்ப அட்டை, ஆவணங்கள், தத்து எடுத்ததற்கான ஒப்பந்தம், ஆட்ேசபங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்த பின்னரே வழங்கியுள்ளார்.

வாரிசு சான்றிதழ் என்பது உறவை மட்டுமே குறிக்க கூடியது என்று உயர் நீதிமன்ற முழு அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது. காலமான டாக்டர் எம்.ஏ.எம்.ராமசாமிக்கும் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையாவுக்கும் உள்ள உறவை மட்டுமே வாரிசு சான்றிதழ் உறுதிபடுத்துகிறது. எம்.ஏ.எம்.ஆர்.முத்தையாவுக்கு மனுதாரர் ஏ.சி.முத்தைா அந்நியராக உள்ள நிலையில் ஆவணங்கள் குறித்து அவர் கேள்வி எழுப்ப முடியாது. ஆவண பொருட்கள் குறித்து குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கேள்வி எழுப்ப முடியும் என்பதும் அந்நியரால் எதிர்த்து வழக்கு தொடர முடியாது என்பதும் சட்டபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, எம்.ஏ.எம்.ஆர்.முத்தையாவுக்கு மயிலாப்பூர் தாசில்தார் வழங்கிய வாரிசு சான்றிதழை ரத்து செய்ய கோர முடியாது. வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என்று உத்தரவிட்டார்.

Tags : MAM Ramasamy ,MAMMR ,Muthiah ,Chennai High Court , Succession certificate issued to businessman MAM Ramasamy's adopted son MAMMR Muthiah is valid: Chennai High Court orders
× RELATED கவுன்சலிங் ரூம்