சாம் கரன் அபார பந்துவீச்சு ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து

பெர்த்: சூப்பர் 12 சுற்று முதல் பிரிவு லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் மோதிய இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பெர்த் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. மோசமாக பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவரில் 112 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. இப்ராகிம் ஸத்ரன் 32, உஸ்மான் கானி 30, நஜிபுல்லா ஸத்ரன் 13, ரகமதுல்லா குர்பாஸ் 10 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர் (3 பேர் டக் அவுட்). இங்கிலாந்து பந்துவீச்சில் சாம் கரன் 3.4 ஓவரில் 10 ரன்னுக்கு 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். ஸ்டோக்ஸ், மார்க் வுட் தலா 2, வோக்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 18.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 113 ரன் எடுத்து வென்றது. கேப்டன் பட்லர், மலான் தலா 18 ரன், ஹேல்ஸ் 19 ரன், ஸ்டோக்ஸ் 2, புரூக் 7 ரன்னில் விக்கெட்டை இழந்தனர். லிவிங்ஸ்டன் 29 ரன், மொயீன் அலி 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சாம் கரன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இங்கிலாந்து 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.

Related Stories: