×

கும்பகோணம் வழியாக மந்திராலயம், மும்பை செல்ல அகமதாபாத் வரை சிறப்பு ரயில்: அக். 27 முதல் இயக்கம்

கும்பகோணம்: கும்பகோணம் வழியாக மந்திராலயம், மும்பை செல்ல அகமதாபாத் வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கும்பகோணம் வழியாக மும்பைக்கு நேரடி ரயில் வசதி ஏற்படுத்த தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம் தொடர்ந்து கோரி வருகிறது. கும்பகோணத்தில் உள்ள ராகவேந்திரா சுவாமிகளின் பரம குருவான விஜயேந்திர சுவாமிகளின் மடம் , சிதம்பரம் அருகில் உள்ள ராகவேந்திரர் பிறந்த இடமான புவனகிரி மற்றும் ராகவேந்திரர் தலைமை மடம் அமைந்துள்ள மந்திராலயம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் நேரடி ரயில் வசதி வேண்டும் என ராகவேந்திர சுவாமிகளின் பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த கோரிக்கைகள் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற அகில இந்திய ரயில்வே கால அட்டவணை கலந்தாய்வு கூட்டத்தில் அகமதாபாத்-ராமேஸ்வரம் இடையே மும்பையின் பகுதிகளான வாசை ரோடு, மற்றும் கல்யாண், பூனா, மந்திராலயம், கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக ஒரு புதிய வாராந்திர ரயில் அறிமுகப்படுத்த கொள்கை அளவில் முடிவு செய்யப்பட்டது.  

அதையடுத்து வரும் அக்டோபர் 27ம் தேதி முதல் வதோத்ரா, சூரத், வாசை ரோடு, கல்யாண் (மும்பை), பூனா, மந்திராலயம், ரேணிகுண்டா, சென்னை எழும்பூர், கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர் வழியாக அகமதாபாத்-திருச்சி இடையே ஒரு வாராந்திர குளிர்கால சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக மேற்கு மண்டல ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரயில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் காலை 9.30 மணிக்கு புறப்பட்டு கல்யாண் (மும்பை) (மாலை 4.52 மணி) பூனா ( இரவு 8.10 மணி), மந்திராலயம் (வெள்ளிக்கிழமை காலை 5.05) , ரேணிகுண்டா (மதியம் 12.15) சென்னை எழும்பூர்( மாலை 4.25) கும்பகோணம் (இரவு 11.30) பாபநாசம் (இரவு 11.47), தஞ்சாவூர் ( நள்ளிரவு 1.35) வழியாக திருச்சிக்கு சனிக்கிழமை அதிகாலை 3.45 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் திருச்சியிலிருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5.45 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர் (7:00) பாபநாசம் (7 .25) கும்பகோணம் (7.50) சென்னை எழும்பூர் மதியம் (2.40) மணி ரேணிகுண்டா மாலை (6.30) மந்திராலயம் (நள்ளிரவு 12.35 மணி), பூனா திங்கட்கிழமை (10:45), கல்யாண் (மும்பை) (பகல் 1.22), வாசை ரோடு(மும்பை) (மதியம் 2.30) சூரத் (மாலை 4.00) வதோத்ரா (6.33) வழியாக அகமதாபாத்திற்கு இரவு 9.15 மணிக்கு சென்றடையும். இந்த சிறப்பு ரயில் சேவை வரும் அக்டோபர் 27ம் தேதி முதல் நவம்பர் 27ம் தேதி வரை இரு மார்க்கங்களிலும் தலா ஐந்து முறை இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.



Tags : Mandiralayam ,Mumbai ,Ahmedabad ,Kumbakonam , Mandiralayam, Mumbai to Ahmedabad special train via Kumbakonam: Oct. 27 First movement
× RELATED புல்லட் ரயில் திட்ட பணிகள் எப்போது...