×

திருவட்டாரில் நாளை துவக்கம்: ஆதிகேசவ பெருமாள் கோயில் ஐப்பசி திருவிழா

குலசேகரம்: திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில் 108 வைணவ ஸ்தலங்களில் பிரசித்திபெற்றது. இங்கு ஆண்டுதோறும் ஐப்பசி, பங்குனி மாதங்களில் 2 முறை திருவிழாக்கள் நடைபெறும். இந்த ஆண்டு ஐப்பசி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. கடந்த ஜூலை 6ம் தேதி திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றதை அடுத்து கோயிலுக்கு நாள்தோறும் வருகை தரும் பக்தர்களின்  எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.  

ஐப்பசி திருவிழாவின் முதல் நாளான நாளை காலை  8.30 முதல் 9.30 மணிக்குள் திருக்கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து  சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், 2ம் நாள் இரவு 9 மணிக்கு சுவாமி அனந்த வாகனத்தில் பவனி வருதல்,  இரவு 10 மணிக்கு ருக்மணி சுயம்பவரம் கதகளி, 3ம் நாள் காலை 8 மணிக்கு பாகவத பாராயணம், இரவு 9 மணிக்கு கமல வாகனத்தில் சுவாமி எழுந்தருளல், இரவு 10 மணிக்கு தட்ச யாகம், கதகளி ஆகியன நடக்கிறது.

நான்காம் நாள் இரவு 7 மணிக்கு  ராமாயண பாராயணம், இரவு 9.30 மணிக்கு சுவாமி பல்லக்கில் பவனி வருதல், இரவு 10 மணிக்கு சந்தான கோபாலம் கதகளி, 5ம் நாள் இரவு 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதியில் கொடியேற்றுதல்,  தொடர்ந்து கருட வாகனத்த்தில் சுவாமி பவனி வருதல், நளசரிதம் கதகளி ஆகியன நடக்கிறது. 6ம் நாள் இரவு 7 மணிக்கு திருவாதிரைக்களி, 9 மணிக்கு சுவாமி   நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், தொடர்ந்து கதகளி, 7ம் நாள்  இரவு 9 மணிக்கு சுவாமி பல்லக்கில் பவனி வருதல், தொடர்ந்து துரியோதன வதம் கதகளி ஆகியன நடக்கிறது.

8ம் நாள் இரவு 9 மணிக்கு பாலிவதம் கதகளி, 9ம் நாள் இரவு 8.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வர கச்சேரி, இரவு 9.30 மணிக்கு சுவாமி கருட வாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல், 10ம் நாள் (நவம்பர் 1ம் தேதி) காலை 6 மணிக்கு ராமாயண பாராயணம், காலை 11 மணிக்கு திருவிலக்கு எழுந்தருளல், இரவு 7 மணிக்கு சிறப்பு நாதஸ்வர இன்னிசை கச்சேரி, கருட வாகனத்தில் சுவாமி ஆறாட்டுக்கு  தளியல் ஆற்றுக்கு எழுந்தருளல், இரவு  1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி ஆகியன நடக்கிறது.

Tags : Thiruvattar ,Adhikesava Perumal temple Aipasi festival , Tomorrow begins in Thiruvattar: Adhikesava Perumal temple Aipasi festival
× RELATED திருவட்டார் அருகே கல் ஏற்றி வந்த டெம்போ பறிமுதல்