தீபாவளியை முன்னிட்டு அரசு பஸ் முன்பதிவு மூலம் ரூ.9.5 கோடி வருவாய்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பஸ்களில் முன்பதிவு செய்ததின் மூலம்  ரூ.9.5 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், சென்னை   கோயம்பேடு  பஸ் நிலையத்தில் தீபாவளி சிறப்பு பஸ்களை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

தீபாவளி திருநாளை முன்னிட்டு,  மாதவரம் புதிய பேருந்து நிலையம், கே.கே. நகர் பேருந்து நிலையம்,  தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம்,  பூந்தமல்லி பைபாஸ் பேருந்து நிறுத்தம், புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கோயம்பேடு ஆகிய இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது.

நேற்றிரவு 7 மணி நிலவரப்படி, சென்னையில் இருந்து இயக்கப்படும் 2,100 தினசரி பஸ்களில் 1,564 பஸ்களும், 1,437 சிறப்பு பஸ்களில் 334 சிறப்பு பஸ்களும்  இயக்கப்பட்டு, இதுவரையில் மொத்தமாக 1,898 பஸ்களில் 1,00,494 பேர் பயணம் செய்துள்ளனர். இன்று  மற்றும் நாளை  2,100 தினசரி பஸ்களுடன் 1,586 மற்றும் 1,195 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது. கோயம்பேடு பஸ் நிலையத்தில் 10 முன்பதிவு மையங்களும், தாம்பரம் சானிடோரியம்  நிலையத்தில்1 முன்பதிவு மையங்கள் என செயல்படுகிறது.

www.tnstc.in மற்றும் tnstc official app இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு  செய்ய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இச்சிறப்பு பஸ்களில் பயணம் செய்திட 1,66,856 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.9.5 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருக்கழுக்குன்றம்-செங்கல்பட்டு அல்லது ஸ்ரீ பெரும்புதூர்-செங்கல்பட்டு வழியாக செல்லலாம். மேலும், 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி வழியாக பஸ்கள் குறித்து தெரிந்து ெகாள்ளலாம்.

ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 044-24749002, 1800 425 6151, 044 26281611 மற்றும் 044-26280445 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். கோயம்பேடு பஸ் நிலையத்தில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை  செயல்படும்.  20 இடங்களில் தகவல் மையங்கள்  அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

எனவே பொதுமக்கள்  பஸ் சேவையை முழுமையாக பயன்படுத்தி கொள்ளுமாறும் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய வேண்டும். கோயம்பேடு  பஸ் நிலையத்திலிருந்து  4 பஸ் நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக 24 மணி நேரமும் இணைப்பு பஸ்கள் இயக்கப்படும்.

Related Stories: