×

பேய் பிடித்திருப்பதாக கூறி இளம்பெண்ணை நிர்வாண பூஜைக்கு கட்டாயப்படுத்திய மாமியார் கைது: கணவன், மந்திரவாதி உட்பட 4 பேருக்கு வலை

திருவனந்தபுரம்: பேய் பிடித்திருப்பதாக கூறி இளம்பெண்ணை ஏர்வாடிக்கு கொண்டு சென்று கட்டாயப்படுத்தி நிர்வாண பூஜை நடத்த முயற்சித்ததாக கூறப்பட்ட புகாரில் மாமியாரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம், பத்தனம்திட்டாவில் தர்மபுரி பென்னாகரத்தைச் சேர்ந்த பத்மா உட்பட இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் மந்திரவாதி உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்கு பின்னர் கேரளாவில் போலி மந்திரவாதிகள் குறித்த பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட அதே பத்தனம்திட்டா மாவட்டம் மலையாளப்புழா என்ற இடத்தில் பேய் விரட்டுவதாக கூறி சிறுவர், சிறுமிகள் உள்பட பலரை அடித்து கொடுமைப்படுத்திய ஷோபனா என்ற பெண் மந்திரவாதியும், அவரது கள்ளக்காதலனும் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.

இதே போல கேரளா முழுவதும் பல்வேறு இடங்களில் மாந்திரீகம் என்ற பெயரில் பல்வேறு கொடுமைகள் அரங்கேறி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண், தனக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி ஏர்வாடியில் வைத்து நிர்வாண பூஜை நடத்த முயற்சித்ததாக போலீசில் புகார் செய்துள்ளது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு: திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றிங்கல் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும், கொல்லம் சடையமங்கலம் பகுதியை சேர்ந்த லைஷா (60) என்பவரின் மகன் ஷாலு சத்தியபாபு (36) என்பவருக்கும் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பரில் திருமணம் நடந்தது.               

திருமணம் முடிந்த ஒரு சில மாதங்களிலேயே பேய் பிடித்திருப்பதாக கூறி அந்த இளம்பெண்ணை அவரது மாமியார் லைஷா, கொல்லம் அருகே நிலமேல் என்ற இடத்திலுள்ள மந்திரவாதியான அப்துல் ஜப்பார் (43) என்பவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். அவர் சில பூஜைகள் செய்த பின்னர் அந்த இளம்பெண்ணை தமிழ்நாட்டிலுள்ள ஏர்வாடிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதன்படி அவரை கணவர் ஷாலு சத்தியபாபு, அவரது தங்கை சுருதி, மாமியார் லைஷா, மந்திரவாதி அப்துல் ஜப்பார், அவரது உதவியாளர் சித்திக் ஆகியோர் ஏர்வாடிக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அங்குள்ள ஒரு இடத்தில் வைத்து இந்த இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி நிர்வாண பூஜை நடத்த அவர்கள் முயற்சித்தனர். ஆனால் அதற்கு அந்த இளம்பெண் மறுத்தார். இதுகுறித்து அந்த இளம்பெண் ஆற்றிங்கல் போலீசில் புகார் செய்தார். மேலும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் தொடர்ந்தார்.

இதற்கிடையே ஆற்றிங்கல் போலீசார் முறையாக விசாரணை நடத்தாததால் இது தொடர்பாக கொல்லம் மாவட்டம் சடையமங்கலம் போலீசில் அவர் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாமியார் லைஷாவை கைது செய்தனர். மந்திரவாதி அப்துல் ஜப்பார், அவரது உதவியாளர் சித்திக், கணவர் ஷாலு சத்தியபாபு மற்றும் அவரது தங்கை சுருதி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.


Tags : Nirvana Puja , Mother-in-law arrested for forcing young girl to perform Nirvana Puja claiming she was possessed by a demon: 4 people including husband, magician arrested
× RELATED மருமகளுக்கு பேய் பிடித்திருப்பதாக...