×

முறுக்கு, தட்டை பெட்டி பெட்டியாக தயாராகிறது தீபாவளி பண்டிகைக்கு பாரம்பரிய பலகாரங்கள் விற்பனை கனஜோர்

நெல்லை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் அரிசி, உளுந்து, வெல்லம் கொண்டு பாரம்பரிய பலகாரங்களான கைசுற்று முறுக்கு, தட்டை, அச்சுமுருக்கு, தேன்குழல், அதிரசம் தயாரிக்கும் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. பல்வேறு இடங்களில் பலகாரங்கள் விற்பனையும் சூடுபிடித்து வருகிறது. தமிழக மக்கள் ெகாண்டாடும் பண்டிகைகளில் தித்திப்பான பண்டிகை என்ற பெருமை தீபாவளிக்கு உண்டு. புதிய வகை ஆடைகள், பட்டாசுகளுக்கு இணையாக தீபாவளி பண்டிகையில் பலகாரங்களும் இடம் பெறும்.

தீபாவளிக்கு இன்று நகர்ப்புறங்களில் ஸ்வீட் வகையறாக்கள் அதிகம் இடம் பிடித்தாலும், பாரம்பரிய பலகாரங்களுக்கு மவுசு எப்ேபாதுமே குறைவதில்லை. அதிலும் முறுக்கு, தட்டை, அச்சு முறுக்கு, அதிரசம் என சில பண்டங்கள் தீபாவளி நாளில் கண்டிப்பாக இடம் பிடிக்கின்றன. கிராமங்களை பொறுத்தவரை 10 நாட்கள் முன்பிருந்தே வீட்டில் பலகாரங்கள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக தொடங்கி விடும். மாநகர பகுதிகளிலும் பாரம்பரிய பலகாரங்கள் தயாரிக்கும் பணிகள் டவுன், தச்சநல்லூர், நெல்லை சந்திப்பு பகுதியில் இப்போது சூடுபிடித்துள்ளது.

புழுங்கல் அரிசியை ஊற வைத்து பின் கிரைண்டர் மூலமாக அரைத்து அந்த மாவை  கொண்டு கைகளால் சுற்றப்பட்டு எண்ணெயில் பொறித்து முறுக்கு தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக கடைகளில் நடந்து வருகிறது. அதேபோல் அரிசி மாவு, கடலை பருப்பு மற்றும் காரத்திற்கான  பொருட்கள் சேர்த்து தட்டை தயாரிப்பும், குழந்தைகள் விரும்பி உண்ணும்  அச்சு முறுக்கு, தேன்குழல், முறுக்கு, சீடை, நெய் விளங்கா, முந்திரிகொத்து உள்ளிட்ட பொருட்களும் தற்போது கடைகளில் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ளது.

முறுக்குகளை பொறுத்தவரை ரூ.2, ரூ.3 மற்றும் 5 என சைசிற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. அதிரசம் மற்றும் அச்சுமுறுக்கு தலா ரூ.5க்கும், 10 எண்ணம் அடங்கிய பாக்கெட்டுகள் ரூ.50க்கும் கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. சில கடைகளில் தேன்குழல், அச்சுமுறுக்கு ஒன்றுக்கு ரூ.10ம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சீடை பாக்கெட்டுகளை பொறுத்தவரை ரூ.20க்கும், ரூ.30க்கும் தனித்தனியாக பார்சல் போடப்பட்டு விற்கப்பட்டு வருகின்றன. கிராமங்களில் மட்டுமே தீபாவளியில் இடம் பெறும் நெய் விளங்கா மற்றும் முந்திரி ெகாத்து ஆகிய பண்டங்களுக்கு நெல்லை கடைகளில் கூடுதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

வீட்டில் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு சென்று வரும் இன்றைய காலகட்டத்தில் அருகில் உள்ள கடைகளுக்கு சென்று இனிப்பு வகைகளை வாங்குவதை பலர் வழக்கமாக வைத்துள்ளனர். இருப்பினும் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப புழுங்கல் அரிசி பயன்படுத்தி கை சுற்று முறுக்கு, அதிரசம் தட்டை, அச்சு முறுக்கு, முந்திரிக்கொத்து, நெய்விளங்கா, தேன்குழல் போன்ற பலகாரங்களை 10 நாட்களுக்கு முன்பே வருகின்ற ஆர்டர்களின் அடிப்படையில் கடைகளில் செய்யத் தொடங்கி விட்டனர்.

தீபாவளிக்கு ஆர்டர் செய்த பொதுமக்கள் இன்றும், நாளையும் அவற்றை மொத்தமாக பெற்று செல்ல உள்ளதாக கடைக்காரர்கள் தெரிவித்தனர். நெல்லை மாநகரில் பாளையங்கோட்டை, டவுன், தச்சநல்லூர், பேட்டை போன்ற பகுதிகளில் பாரம்பரிய பலகாரங்களை நன்கு தயாரிக்கப் பழகியவர்கள் தற்போது இரவு, பகலாக பலகார தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சில கடைகளில் பெட்டி, பெட்டியாக பலகாரங்கள் அடுக்கி வைக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ளன.

Tags : Diwali , Rolled, flat, boxed ready, Diwali festival, multipurpose sale
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...