×

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மற்றொரு மாற்றமாக திருமலையில் ரூ.15 கோடியில் தர்மரதம் இ-பஸ்களாக மாற்றம்: அறங்காவலர் குழு தலைவர் தொடங்கி வைத்தார்

திருமலை: சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மற்றொரு மாற்றமாக திருமலையில் தர்மரதம் இ-பஸ்களாக மாற்றப்பட்டு இயக்கப்படுகிறது. திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் ஆலெக்ட்ரா நிறுவனத்தின் பிரதிநிதிகள், அரசு போக்குவரத்து கழகம் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான  அதிகாரிகளுடன் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா நேற்று ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
திருமலையின் புனிதத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதில் தேவஸ்தானம் மற்றொரு நடவடிக்கையை எடுத்துள்ளது. திருமலையில் பக்தர்களுக்காக இயக்கப்படும் தர்ம ரதங்களுக்கு (இலவச பஸ்கள்) டீசல் பஸ்களுக்கு மாற்றாக மின்சார பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  முதல்வர் ஜெகன்மோகனின் அறிவுறுத்தலின்படி திருமலையை மாசு இல்லாத புனித ஸ்தலமாக மாற்ற ஏற்கனவே பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கவர்களுக்கு தடையும் இதன் ஒரு பகுதியாகும்.

முதற்கட்டமாக திருமலையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு மின்சார கார்கள் வழங்கப்பட்டுள்ளன.  2ம் கட்டமாக திருப்பதி- திருமலை இடையே மின்சார பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றுக்கு பக்தர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. திருமலையில் பக்தர்களுக்காக  இயக்கப்படும் தர்மரதம் டீசல் பஸ்களுக்கு பதிலாக மின்சார பஸ்களை இயக்க 10 பஸ்களை நன்கொடையாக வழங்குமாறு ஒலெக்ட்ரா நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணாவிடம் கேட்டுக்கொண்டேன்.

அதனை ஏற்று அவரும் ரூ.15 கோடியில் 10 மின்சார பஸ்களை வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது. பஸ்களை வடிவமைத்தல் மற்றும் நிர்வகித்தல் தொடர்பாக ஆலோசிக்கவே இந்த கூட்டம் நடைபெற்றது. பக்தர்களுக்கு வசதியாக பஸ்களை வடிவமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 3வது கட்டத்தில் திருமலையில் இயங்கும் டாக்சிகள் மற்றும் பிற வாடகை வாகனங்களுக்கும் வங்கி கடன்களை வழங்குவதன் மூலம் தேவஸ்தான ஒத்துழைப்புடன் மின்சார வாகனங்களாக மாற்றப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

முன்னதாக, ​​ஒலெ க்ட்ரா நிறுவனத்தின் பிரதிநிதிகள் பஸ்களின் வடிவமைப்பு மற்றும் நிர்வாக அம்சங்கள் குறித்து விளக்கினர். அப்போது    நிறுவனத்தின் முதன்மை நிர்வாக இயக்குநர் பிரதீப், ஆர்டிசி நிர்வாக இயக்குநர் கோபிநாத், மாவட்ட பொது போக்குவரத்து அலுவலர் செங்கல், தேவஸ்தான போக்குவரத்து பிரிவு பொது மேலாளர் சேஷா, திருமலை டிப்போ
மேலாளர் விஸ்வநாத் மற்றும் பலர் உடனிருந்தனர். தொடர்ந்து அறங்காவலர் குழு தலைவர் சுப்பா, அதிகாரிகளுடன் திருமலை அன்னமய்யா பவனில் இருந்து லேபாக்சி சந்திப்பு வரை மின்சார பஸ்சில் பயணம் செய்தார்.

Tags : Dharmaratam ,Tirumalay , Environment Protection, Thirumalai, Dharmaratham Conversion to E-buses, Trustee Committee Chairman,
× RELATED வேண்டியதை தந்தருளும் வேங்கடவன்