தனிநபரின் சந்தேகத்துக்காக தாஜ்மகாலை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: ‘உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை ஆய்வு செய்ய உத்தரவிட முடியாது,’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மூத்த வழக்கறிஞர் ரகிலேஷ் சிங் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், ‘முகலாயப் பேரரசர் ஷாஜகான் தான் தாஜ்மகாலை கட்டினார் என்பதற்கு அறிவியல் ரீதியாக எந்தவித ஆதாரமும் கிடையாது. முன்னோர்கள் கூறியதை அப்படியே நாம் கடைபிடித்து வருகிறோம்.

தாஜ்மகால், ‘தேஜோ மகாலாய’ என அழைக்கப்பட்டு வந்தது. இது, கடந்த 1212ம் ஆண்டு கட்டப்பட்டது. பிற்காலத்தில் இந்த மகால் ஷாஜகானால் கைப்பற்றப்பட்டு தாஜ்மகால் என மாற்றப்பட்டது. இதில் உள்ள ஒரு பகுதியில் சிவன் கோயில் இருப்பதாகவும் வரலாற்று தகவல் உள்ளது. அதனால், தாஜ்மகாலின் உண்மையான வரலாற்றை ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும்,’ என கோரினார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பை சில தினங்களுக்கு முன் ஒத்திவைத்திருந்தது.

இந்நிலையில், நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு அளித்தது. அதில், ‘தாஜ்மகால் குறித்து ஆய்வு செய்யக்கோரும் மனுவில் எந்த முகாந்திரமும் கிடையாது. இந்த வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் தெளிவான தீர்ப்பு அளித்துள்ளது. வரலாற்றை நம்புவதும், நிராகரிப்பதும் மனுதாரரின் தனிப்பட்ட விருப்பம். அதனால், உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை தனிப்பட்ட நபரின் சந்தேகத்துக்காக, ஆய்வு செய்ய உத்தரவிட முடியாது,’ என கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர்.

Related Stories: