×

அருணாசல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 3 பேர் பலி: ஒரே மாதத்தில் 2வது முறை

இடாநகர்: அருணாசலப் பிரதேசத்தில் ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மலையில் விழுந்து நொறுங்கி எரிந்தது. இதில், 3 பேர் பலியாகினர். அருணாசலப் பிரதேசம், சியாங் மாவட்டத்தில் ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நேற்று காலை வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டது. காலை 10.43க்கு மலைக்கு மேலே பறந்து கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் கீழே விழுந்தது. மலையில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்து நாசமானது. விபத்து நடந்த கிராமத்துக்கு செல்வதற்கு தொங்கு பாலத்தை தவிர, சாலை வசதி இல்லை.

எனவே ராணுவம், விமானப்படையை சேர்ந்த 3 குழுவினர் எம்ஐ-17, துருவ் ஹெலிகாப்டர்கள் மூலமாக விபத்து நடந்த இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஹெலிகாப்டரில் 5 பேர் பயணம் செய்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு 3 பேரின் சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. அருணாசலப் பிரதேசத்தில் கடந்த ஒரு மாதத்தில் 2வது முறையாக ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியுள்ளது. கடந்த 5ம் தேதி தவாங் மாவட்டத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில், 2 விமானிகளில் ஒருவர் உயிரிழந்தார். ஒருவர் படுகாயமடைந்தார்.


Tags : Army ,Arunachal Pradesh , 3 killed in Army chopper crash in Arunachal Pradesh: 2nd time in a month
× RELATED ஈரான் அனுப்பிய 300 டிரோன்களை வழிமறித்து...