அயர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வி வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்: 2 முறை சாம்பியனுக்கு தலைக்குனிவு

ஹோபர்ட்: ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் முதல் சுற்று பி பிரிவு லீக் ஆட்டத்தில் அயர்லாந்து அணியிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றத்துடன் வெளியேறியது. பெல்லரீவ் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன் எடுத்தது. கைல் மேயர்ஸ் 1, ஜான்சன் சார்லஸ் 24, எவின் லூயிஸ், கேப்டன் நிகோலஸ் பூரன் தலா 13 ரன், பாவெல் 6 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்த பிராண்டன் கிங் 62 ரன் (48 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்), ஓடியன் ஸ்மித் 19 ரன்னுடன் (12 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அயர்லாந்து பந்துவீச்சில் கேரத் டெலானி 4 ஓவரில் 16 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். மெக்கார்தி, சிமி சிங் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 147 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து களமிறங்கியது. பால் ஸ்டர்லிங், கேப்டன் பால்பிர்னி இருவரும் துரத்தலை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7.3 ஓவரில் 73 ரன் சேர்த்து அமர்க்களமான தொடக்கத்தை கொடுத்தது. பால்பிர்னி 37 ரன் (23 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி அகீல் உசைன் பந்துவீச்சில் மேயர்ஸ் வசம் பிடிபட்டார்.  அடுத்து ஸ்டர்லிங் - லோர்கன் டக்கர் இணைந்து அதிரடியைத் தொடர, அயர்லாந்து 17.3 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றதுடன் முதல் முறையாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.

ஸ்டர்லிங் 66 ரன் (48 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), டக்கர் 45 ரன்னுடன் (35 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். கேரத் டெலானி ஆட்ட நாயகன் விருது பெற்றார். 2012 மற்றும் 2016ல் உலக கோப்பை டி20 சாம்பியனாக முடிசூடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்த முறை முதல் சுற்றுடன் மூட்டை கட்டியது அந்த அணிக்கு மிகப் பெரிய தலைக்குனிவாக அமைந்தது.  அதே சமயம், கடந்த 3 உலக கோப்பை டி20 தொடரில் முதல் சுற்றுடன் வெளியேறி இருந்த அயர்லாந்து அணி முதல் முறையாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.

Related Stories: