×

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஓட்டலில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழப்பு: ஒப்பந்ததாரர் மேலாளர் கைது

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் ஓட்டலில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 3 பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக பலியாகினர். ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஒட்டி பிரபல தனியார் ஓட்டல் உள்ளது. இங்கு பார், ஸ்பா, விளையாட்டு மைதானத்துடன் அடங்கிய தங்கும் அறைகள் உள்ளன. பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் இந்த ஓட்டலில் அறை எடுத்து தங்கி செல்கின்றனர். இந்நிலையில், இந்த ஓட்டலின் கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டு, நிரம்பி வழிந்துள்ளது. இதனை சுத்தம் செய்ய, ஸ்ரீபெரும்புதூர் கட்சிப்பட்டு பகுதியை சேர்ந்த ரங்கநாதன் (51), நவீன்குமார் (30), திருமலை (18) உள்ளிட்ட 5 பேர் நேற்று காலை 10 மணிக்கு ஓட்டலுக்கு வந்துள்ளனர்.

பின்னர், ஓட்டலின் பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டியில் ரங்கநாதன், நவீன்குமார், திருமலை ஆகியோர் மட்டும் இறங்கி சுத்தம் செய்ய முயன்றபோது, விஷவாயு தாக்கி கழிவுநீர் தொட்டியின் உள்ளே விழுந்து முழ்கி உள்ளனர். இதனை கண்ட சக தொழிலாளர்கள் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கழிவுநீர் தொட்டியில் இருந்து சுமார் 15அடி அளவிற்கு கழிவுநீரை அகற்றினர். பின்னர், கழிவுநீரின் சகதியில் சிக்கி இறந்து கிடந்த 3 பேரின் சடலங்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

இதுகுறித்து, ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், தனியார் ஓட்டலில் சேகரமாகும் கழிவுநீரை ஓட்டலில் உள்ள கழிவுநீர் தொட்டியில் சேகரித்து, பின்னர் ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் நேரடியாக வெளியேற்றி வந்ததும், கழிவுநீர் தொட்டியில் அவ்வப்போது ஏற்படம் அடைப்பை அப்பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளர்களை கொண்டு சுத்தம் செய்து வந்ததும் தெரிந்தது. வழக்கம்போல் நேற்று கழுவுநீர் தொட்டி அடைப்பை சுத்தம் செய்ய வந்த 3 பேர் விஷவாயு தாக்கி இறந்தது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து தனியார் விடுதியின் உரிமையாளர் சத்தியமூர்த்தி, மேலாளர் சுரேஷ்குமார், ஒப்பந்ததாரர் ரஜினி ஆகியோர் மீது ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, மேலாளர் சுரேஷ்குமார், ஒப்பந்ததாரர் ரஜினி ஆகிய 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Sriperumbudur , 3 people killed by poison gas while cleaning sewage tank in hotel near Sriperumbudur: Contractor manager arrested
× RELATED குடும்பத்துடன் திருப்பதிக்கு...