×

இலவச பொது கழிப்பிடத்தில் கட்டணம் வசூலித்த 2 பேர் மீது புகார்: மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: மாநகராட்சி இலவச பொதுக் கழிப்பிடத்தில் கட்டணம் வசூலித்த இருவர் மீது காவல் துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியின் சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 943 இடங்களில் 7,590 இருக்கை வசதிகள் கொண்ட பொதுக் கழிப்பிடங்கள் உள்ளன. இந்த கழிப்பிடங்கள் பொதுமக்கள் கட்டணமில்லாமல் பயன்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. மேலும், சென்னையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ரூ.36 கோடி மதிப்பில் 366 இடங்களில் சிதிலம் அடைந்த மற்றும் பயன்படுத்த உகந்த நிலையில் இல்லாத கழிப்பிடங்களை மறுசீரமைக்கும் பணிகளும், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் புதிய பொதுக்கழிப்பிடங்கள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.

இத்திட்டப் பணியின் கீழ் மேற்குறிப்பிட்ட 366 இடங்களில் 860 இருக்கைகள் கொண்ட கழிப்பிடங்களும், 620 சிறுநீர் கழிப்பிடங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சியின் சார்பில் அமைக்கப்படும் பொதுக்கழிப்பிடங்களில் பொதுமக்களுக்கு எவ்வித கட்டணமுமின்றி சேவையாக பயன்பாட்டில் உள்ளது. அங்கு கட்டணமில்லா பொதுக்கழிப்பிடம் என பெயர் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. இதனை மீறி பொதுமக்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு சில இடங்களில் பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதாக புகார்கள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில், கடந்த 3ம் தேதி அன்று எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள பொதுக்கழிப்பிடத்தில் கட்டணம் வசூலித்த 2 பேர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பொதுக்கழிப்பிடங்களில் பொதுமக்களிடம் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட நபர்களின் மீது காவல்துறையில் புகார் பதியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Complaint against 2 persons for charging in free public toilet: Corporation action
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...