×

விதவிதமான பட்டாசுகள் தயாரிப்பு: வடமாவட்ட சிவகாசியான புதுச்சேரி அரியாங்குப்பம்

புதுச்சேரி: தீபாவளி என்றாலே புத்தாடை, இனிப்பு என்ற வரிசையில் முக்கிய இடம் பட்டாசுக்கு உண்டு. குழந்தைகள் தங்களுக்கு வேண்டிய பட்டியலில் பட்டாசை தான் முதலிடத்தில் வைத்துள்ளனர். தமிழ் பேசும் அனைவருக்கும் பட்டாசு என்றாலே அவர்களின் நினைவுக்கு வரும் ஊர் சிவகாசி தான். அதே நேரத்தில் புதுச்சேரியிலும் ஒரு சிவகாசியுண்டு. அதிகளவில் பட்டாசுகள் தயாராகும் புதுச்சேரியிலுள்ள அரியாங்குப்பம்தான் அந்த இடத்தை பிடிக்கிறது.
 
புதுச்சேரி ஒட்டியுள்ள ஆற்றங்கரையோரமுள்ள பகுதிகளில் 8 இடங்களில் இந்த பட்டாசு தொழிற்சாலைகள் இயங்குகிறது. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் உள்ளூராக இருந்தாலும் சத்தமோ, சர்வதேச தரத்துக்கு இணையாக இருப்பதால் மக்களிடம் அதிக வரவேற்பை இங்குள்ள பட்டாசுகள் பெற தொடங்கியுள்ளன. இதனால் புதுச்சேரி மட்டுமில்லாமல் கடலூர், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் அரியாங்குப்பம் வந்து பட்டாசுகளை வாங்கிச் செல்வது அதிகரித்துள்ளது.
 
பொன்விழா ஆண்டுகளை கடந்து நிற்கும் இந்த பட்டாசு தொழிற்சாலைகளில் முதலில்  உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் துக்க நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அதிகளவில் பொதுமக்கள் பயன்படுத்தினர். நாளடைவில் இவற்றின் தரம், குறைந்தவிலை ஆகியவை காரணமாக பண்டிகை காலங்களிலும் இப்பட்டாசுகளை பொதுமக்கள் அதிகளவில் வாங்கி பயன்படுத்தத் தொடங்கினர். இதனால் சிவகாசிக்கு நிகராக தற்போது புதுச்சேரி, அரியாங்குப்பத்தில் பட்டாசுகள் உற்பத்தி வேகமெடுத்து வருகின்றன.
 
இதுபற்றி பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூறுகையில், சிவகாசிக்கு அடுத்த படியாக சமீபகாலமாக அரியாங்குப்பம் பட்டாசுக்கும் புதுச்சேரியை மட்டுமின்றி தமிழகத்தைச் சேர்ந்தவர்களிடமும் அதிக வரவேற்பு கிடைத்து வருகின்றன.
இதனால் இவற்றின் விற்பனையும் அதிகரித்துள்ளது. 10 எண்ணிக்கையிலான ஒரு பாக்கெட்டில் பெரிய பட்டாசுகள் இடம்பெற்றுள்ள நிலையில் அவை ரூ.20 முதல் ரூ.25 வரை மட்டுமே விற்கப்படுகிறது. சின்ன பாக்கெட்டில் விலை ரூ.35 முதல் ரூ.40 வரை விற்கப்படுகின்றன. மீடியம் சைஸ் பாக்கெட்டுகள் ரூ.40 முதல் ரூ.50 வரை விலைபோகிறது. 10 தவுசன் வாலா போல் அல்லாமல் சிவகாசிக்கு நிகராக, தொடர் சரவெடிகளை 150, 250, 350, 550 என்ற எண்ணிக்கையில் மீட்டர் அளவீடு கணக்கில் தயாரிக்கப்படுவது இங்கு தனிச்சிறப்பாகும்.
 
இதுதவிர ஒருமாடி உயரத்துக்கு செல்லும் புஸ்வானம், நெட்டுகுத்தாக விட்டுவிட்டு நீண்ட நேரத்திற்கு பொறி பொறியாக தீப்பிழம்புகள் கக்கும் புதிய ரக புஸ்வாணங்களும் வரவேற்பு கிடைத்துள்ளது. புஸ்வானம் சிறியது ரூ.5 முதல் ரூ.50 வரையிலும், பாம் ரூ.15 முதலும் கிடைக்கின்றன. உற்பத்தி செய்யபடும் தொழிற்சாலைகளில் விபத்து பாதுகாப்பு தொடர்பாக அதிக விதிமுறைகளை பின்பற்றுகிறார்கள். பட்டாசு வாங்க வரும் நபர்கள் 20 மீட்டர் தூரத்தில் நிற்க வேண்டும். செருப்பு, ஷூ அணிந்து வரக்கூடாது. செல்போன் பயன்படுத்தக் கூடாது. இயற்கை வெளிச்சத்தில் மட்டும் பட்டாசு தயாரிப்பது போன்ற விதிமுறைகளை கடுமையாக பின்பற்றி வருகிறார்கள்.
 
பொதுமக்கள் நேரடியாக இங்கு வந்து பட்டாசுகளை வாங்கிச் செல்வது மட்டுமின்றி சந்தையிலும் அரியாங்குப்பம் பட்டாசின் விற்பனை பரவத் தொடங்கியுள்ளது. விரைவில் சிவகாசிக்கு அடுத்தப்படியாக, புதுச்சேரியிலும் பட்டாசு தயாரிப்பு, விற்பனையில் சாதனை படைக்கும் சூழல் அதிகரித்துள்ளது என்றால் மிகையாகாது என்கின்றனர் உள்ளூர்வாசிகள். இதனால் இந்தாண்டு வடமாவட்டத்தின் சிவகாசி என்றழைக்கப்படும் புதுச்சேரி அரியாங்குப்பம் பட்டாசுகள் சத்தம் நம் செவிகளை துளைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கவர்னர் ஆய்வு ரத்து: புதுச்சேரியில் கடந்தாண்டு 15 தொழிற்சாலைகள் பட்டாசு உற்பத்தி செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. ஆனால் இந்தாண்டு பல்வேறு நிபந்தனைகளால் 8 நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை. இதனால் 7 தொழிற்சாலைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. அங்கு முழுவீச்சில் பட்டாசு தயாரிப்புகள் நடக்கிறது. உற்பத்தி குறைவாக இருப்பினும் விலையில் கடந்தாண்டைவிட பெரியளவில் மாற்றமில்லை. இதனால் அவ்வப்போது தாசில்தார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  மேலும் பட்டாசுக்கு பயன்படுத்தப்படும் வெடிமருந்துகள் சரியாக பயன் படுத்தப்படுகிறதா, வெடிமருந்து இருப்பு சரியாக இருக்கிறதா? என்பது குறித்து தவளக்குப்பம்  போலீசார் தினமும் ஆய்வு செய்கின்றனர். இதனிடையே கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அரியாங்குப்பம் பட்டாசு தொழிற்சாலைகளை ஆய்வுசெய்ய இருப்பதாக இன்று தகவல் வெளியான நிலையில் திடீரென அவை பாதியில் ரத்து செய்யப்பட்டது.

Tags : Puducherry Ariyanguppam ,Sivakasi ,North District , Variety of Firecrackers Production: Puducherry Ariyanguppam, Sivakasi, North District
× RELATED ஓட்டுப்பதிவு இயந்திரம்...