×

தமிழகத்தில் ஒருபோதும் ஆரிய மாடலை நுழையவிடமாட்டோம்: சுப.வீரபாண்டியன் பேச்சு

பெரம்பூர்: தமிழகத்தில் ஒருபோதும் ஆரிய மாடலை நுழையவிடமாட்டோம் என புளியந்தோப்பில் நடந்த விழாவில் சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார். சென்னை கிழக்கு மாவட்டம் திருவிக நகர் வடக்கு பகுதி 72வது வட்ட திமுக சார்பில்,  2வது முறையாக திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா புளியந்தோப்பில் நேற்று நடந்தது. சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு  தலைமை வகித்தார்.

திமுக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்பி, சிபிஐ மாநில துணை செயலாளர் சுப்புராயன், திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.  இதில், வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, எம்எல்ஏ தாயகம் கவி மற்றும் கட்சி நிர்வாகிகள்  கலந்துகொண்டனர். இதையடுத்து, திருச்சி சிவா  எம்பி பேசுகையில், ”இந்தியை யாரும் படிக்கவேண்டாம் என்று சொல்லவில்லை. திணிக்க வேண்டாம் என்றுதான் சொல்கின்றோம்.

இந்தியா சுதந்திரமடைந்தபோது இந்தி ஆட்சி மொழி அல்ல, ஆங்கிலம்தான் இருந்தது. வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது ஒரு வாக்கு வித்தியாசத்தில்தான் இந்தி மொழி ஆட்சி மொழியாக வந்தது. 1965ம் ஆண்டு இந்தி மொழியை தமிழ்நாடு எதிர்க்கவில்லை என்றால் ஆட்சி மொழியாக்கி இருப்பார்கள். அரசியல் சட்டத்தின் முதல் பக்கத்தை புரட்டி பார்த்தால் தெரியும், அதில் இருப்பது பாரத தேசம் என்பது ஒன்றியங்கள் என்றுதான் இருக்கும். இந்தியா சுதந்திரமடைந்தபோது நாடு 8 மாகாணங்களாக இருந்தது. எனவேதான் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. தமிழகத்தில் மொழியை வைத்து அரசியல் செய்ய முடியாது” என்றார்.

சுப.வீரபாண்டியன் பேசுகையில், ”இந்தியா முழுவதும் காவி சாயம் பூச ஒன்றிய அரசு முயல்கிறது. இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகளை அரவணைக்கும் ஒரே தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டுமே. தீட்சிதர்கள் வீட்டில் குழந்தைகள் திருமணம் நடைபெற்று வருகிறது. எனவே, திமுக ஆட்சியில்தான் கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எதற்காக குழந்தை திருமணத்தை நடத்துகிறீர்கள் என கேட்கிறேன்.

உடன் கட்டை முறையை அந்த காலத்தில் இருந்ததே திராவிட இயக்கம்தான் தடுத்து நிறுத்தியது. தமிழகத்தில் ஒருபோதும் ஆரிய மாடலை நுழையவிடமாட்டோம். காங்கிரஸ் கட்சி வலிமை பெறவேண்டும்  என கன்னியாகுமரியில்  முதல்வர் முக.ஸ்டாலின் துவக்கிவைத்தார். 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முன்னோட்டம்தான் அவை. பாஜ, அதிமுகவை அழிக்க நினைக்கிறது. அண்ணா, கலைஞர் பற்றி எவன் ஒருவன் தவறாக பேசினாலும் மரியாதை கொடுக்க முடியாது” என்றார். நிகழ்ச்சியில், பகுதி செயலாளர் தமிழ்வேந்தன். சாமிக்கண்ணு, வர்த்தகர் அணி செயலாளர் உதயசங்கர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Aurian ,Tamil Nadu ,Weerabantian , We will never allow Arya model to enter Tamil Nadu: Suba Veerapandian speech
× RELATED கழுகுகள் மரணத்துக்கு காரணமாக உள்ள...