நடிகர் வடிவேல் பட காமெடியை போல் ‘மண்ட மேல இருக்குற கொண்டைய மறந்திட்டியே பாப்பு’: புத்த துறவி போன்று டெல்லியில் வசித்த சீன பெண் உளவாளி கைது

புதுடெல்லி: டெல்லியின் திபெத்திய குடியிருப்பு பகுதியில் புத்த துறவியை போன்று வசித்து வந்த சீனப் பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் சீனாவிற்காக உளவு வேலை பார்த்தது தெரியவந்துள்ளது. தலைநகர் டெல்லியின் வடக்கு பகுதியில் மஜ்னு கா தில்லா என்ற இடத்தில் திபெத்திய அகதிகள் குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பு பகுதியில் நேபாள துறவியை போன்று பெண் ஒருவர் வசித்து வந்தார்.

இதனை கவனித்து வந்த உளவுத்துறை போலீசார், அந்தப் பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் சீனாவிற்காக உளவு பார்க்கும் பெண் என்று தெரியவந்ததால், அவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து டெல்லி போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட சீனப் பெண்ணின் பெயர் டோல்மா லாமா என்று கூறப்பட்டாலும், அவரது உண்மையான பெயர் காய் ரூவோ என்று தெரியவந்துள்ளது. நேபாளத்தின் காத்மாண்ட் பகுதியில் இருந்து சீன பாஸ்போர்ட்டை பயன்படுத்தி கடந்த 2019ம் ஆண்டு டெல்லி வந்துள்ளார்.

திபெத்திய அகதிகள் காலனி மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்திற்கு அருகிலுள்ள மஜ்னு கா தில்லா பகுதியில் வசித்து வந்தார். திபெத்திய அகதிகள் குடியிருப்பில் வசித்த போது, புத்த துறவிகள் அணியும் பாரம்பரிய உடைகளை போன்று அடர் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து ெகாண்டு, மக்களிடம் பழகிவந்தார். ஆனால், துறவிகளுக்குப் காணப்படும் பொதுவான மற்ற அடையாளங்கள் அவரிடம் இல்லை. தனது தலைமுடியை அவரது நாட்டு பழக்க வழக்கங்களின்படி குட்டையாக வெட்டி வைத்திருந்தார். துறவிகள் மொட்டை அடித்திருப்பது போன்று அவர் மொட்டை அடித்துக் கொள்ளவில்லை. அதனால் அவர் மீது சந்தேகம் வலுத்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு ஆங்கிலம், மாண்டரின், நேபாளி ஆகிய மூன்று மொழிகள் அறிந்தவராக உள்ளார். சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியினர் தன்னை கொல்ல திட்டமிட்டிருந்ததால், இந்தியாவுக்கு வந்ததாக கூறினார். ஆனால் அவர் சீனாவின் உளவாளி என்று தெரியவந்ததால், அவரை கைது செய்து விசாரித்து வருகிறோம்’ என்றார். காமெடி நடிகர் வடிவேல் நடித்த படத்தில், ‘மண்ட மேல இருக்குற கொண்டைய மறந்திட்டியே’ என்று வசனம் போன்று, சீனப் பெண் துறவிக்கான அடையாளங்களுடன் உளவு பார்த்த நிலையில், தனது தலைமுடியை மாற்றாததால் சிக்கிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: