×

நாமக்கல் அருகே முதலைப்பட்டியில் ரூ.19.50 கோடியில் புதிய பேருந்து நிலையம்: அமைச்சர் நேரு அடிக்கல் நாட்டினார்

நாமக்கல்: நாமக்கல் அருகே முதலைப்பட்டியில் ரூ.19.50 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணியை, அமைச்சர் நேரு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இன்னும் 10 மாதத்தில் பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் நகராட்சி முதலைப்பட்டியில், புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா, கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நேற்று நடைபெற்றது.

நகர்மன்ற தலைவர் கலாநிதி வரவேற்றார். நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா திட்ட விளக்கவுரையாற்றினார். சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி, மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் பேசினர்.

நிகழ்ச்சியில் ரூ.19.50 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணியை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்து பேசியதாவது:
நாமக்கல் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிக்கு முதற்கட்டமாக ரூ.20 கோடியும், அடுத்தகட்டமாக ரூ.20 கோடியும் விடுவிக்கப்படும். கொசவம்பட்டி ஏரியை மேம்படுத்த எம்எல்ஏ கோரிய ரூ.40 கோடியில், தற்போது ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையம் இணைப்பு சாலைகள், நான்கு வழிச்சாலை முதலைப்பட்டி வரை 1 கி.மீ., துறையூர் சாலை 9 கி.மீ., என்றும் நிலமெடுக்கும் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துள்ளது. இந்த பணிகள் விரைவில் முடிந்தால், 10 மாத காலத்திற்குள் முழுமையாக பேருந்து நிலையம் கட்டும் வேலையும் முடிவடையும். மூதறிஞர் ராஜாஜி சேலம் நகர்மன்ற தலைவராக இருந்தபோது, சேலம் பனமரத்துப்பட்டி ஏரியிலிருந்து தான், ராசிபுரத்திற்கு குடிநீர் கொண்டு வந்துள்ளார். 2,300 ஏக்கர் கொண்ட அந்த ஏரியை செப்பனிட்டு நீர்த்தேக்கி விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்த, முதல்வர் முதற்கட்டமாக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஏரியிலிருந்து வரக்கூடிய நீரால், எந்த காலத்திலும் ராசிபுரம் மற்றும் நாமக்கல் பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு இல்லை என்ற வகையில் இந்த திட்டத்தை ஏற்படுத்தியுள்ளார்.

 தமிழ்நாட்டில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் இருக்கின்றன. நகர பகுதிகளில் மட்டும், 4.50 கோடி மக்கள் வசிக்கிறார்கள். 2011 மக்கள் தொகை கணக்கடுப்பின்படி, நகர பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொகை, 48 சதவிகிதத்திலிருந்து 60 சதவிகிதத்திற்கு மேலாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, தமிழக முதல்வர் நகர்ப்புற மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். திருச்செங்கோடு மற்றும் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த 669 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் ஆலாம்பாளையம், படைவீடு மற்றும் சேலம் மாவட்டம் சங்ககிரி ஆகிய பேரூராட்சிகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம், ரூ.399.46 கோடியில் 98 சதவிகிதம் பணிகள் முடிவடைந்து, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது.

ராசிபுரம் நகராட்சி மற்றும் 8 பேரூராட்சி, 523 குடியிருப்புகள் பயன்பெறும் வகையில், ரூ.854.37 கோடியில் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. புதியதாக ஜல்ஜீவன் திட்டத்தில் மல்லசமுத்திரம், எலச்சிப்பாளையம், பரமத்தி ஒன்றியங்களைச் சேர்ந்த 547 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் ரூ.329 கோடியில் மேற்கொள்ள பணிகள் ஆய்வில் உள்ளது, விரைவில் திட்டம் ஆரம்பிக்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து பகுதியிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது, சாலைகளை சீராக்கி தருவது, பேருந்து நிலையங்கள் அமைப்பது, விவசாய உற்பத்தி பொருட்களை பொதுமக்களுக்கு விநியோகிக்கும் வகையில் சந்தைகள் உருவாக்கித் தருவது உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தி, நாமக்கல்லை வளர்ச்சியடைந்த மாவட்டமாக உருவாக்கப்படும். இவ்வாறு அமைச்சர் நேரு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத்தலைவர் பூபதி, முன்னாள் எம்பி சுந்தரம், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, நகராட்சி நிர்வாக சேலம் மண்டல இயக்குநர் சுல்தானா, நகராட்சி ஆணையாளர் சுதா, நகர செயலாளர்கள் ராணா.ஆனந்த், சிவக்குமார், சங்கர் 2வது வார்டு கவுன்சிலர் சங்கீதா, நகராட்சி ஆணையாளர் சுதா மற்றும் சேலம் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் சுல்தானா, கட்டுமான பணியை மேற்கொள்ளும் அசோக் கன்ஸ்ட்ரக்சன் நிர்வாக பங்குதாரர் அசோக்குமார் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

50 பஸ்கள் நிறுத்தும் வசதி
நாமக்கல் நகராட்சி 39 வார்டுகளை உள்ளடக்கிய 55.24 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டதாகும். சிறப்புநிலை நகராட்சியான நாமக்கல்லில், 1.38 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். தற்போதுள்ள “பி” வகுப்பு பேருந்து நிலையம், கடந்த 1980ம் ஆண்டு முதல் 3.77 ஏக்கர் பரப்பளவில் 27 பேருந்து நிறுத்தங்கள் கொண்டு இயங்கி வருகிறது. நகரின் மத்திய பகுதியில் பேருந்து நிலையம் அமைந்துள்ளதால், போக்குவரத்து நெரிசலை தடுக்கும் பொருட்டு புதிய புறநகர் பேருந்து நிலையம், முதலைப்பட்டியில் 13 ஏக்கரில் அமைக்கப்படுகிறது. அங்கு 50 பேருந்து நிறுத்தங்கள், 57 கடைகள், 2 உணவகங்கள், 3 பயணியர் காத்திருப்பு பகுதி, 2 ஏடிஎம்கள், 3 கட்டண கழிப்பிடங்கள், பொருள் வைப்பறை மற்றும் 200 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி கொண்ட இருசக்கர வாகன நிறுத்துமிடம் அமைய உள்ளது.

Tags : Mudalaipatti ,Namakkal ,Minister ,Nehru , Namakkal, Mudalaipatti, New Bus Stand, Minister Nehru laid the foundation stone
× RELATED போட்டியாளர்களுக்கு இலவச பயிற்சி