2 முறை சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் நாக் அவுட்: டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது

ஹொபெர்ட்: டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறியது. டி20 உலக கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் இன்றுடன் முடிவடைகிறது. தகுதிச்சுற்றின் க்ரூப் ஏ-வில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின. க்ரூப் பி-யில் இருந்து சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறப்போவது எந்த அணிகள் என்பதை தீர்மானிக்கும் இன்றைய முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸும் அயர்லாந்தும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பிரண்டன் கிங் 62 ரன்கள் குவித்தார். அடுத்ததாக களமிறங்கிய அயர்லாந்து அணி 17.3 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 150 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்று ‛சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறியது. பால் ஸ்டிர்லிங் 66 ரன்களுடன் ,லோர்கன் டக்கர் 45 ரன்களுடன் களத்தில் இருந்தனர். ஒரு வெற்றியை மட்டுமே பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்த ‛டுவென்டி-20 உலக கோப்பை தொடரில் முதல் சுற்றுடன் வெளியேறியது.

டி20 உலகக்கோப்பையில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரைவிட்டு வெளியேறி உள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டி20 போட்டிகளில் அதிரடிக்கு பெயர் போன வெஸ்ட் இண்டீஸ் நடப்பு உலகக்கோப்பை தொடரில் வெளியேறியது மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Related Stories: