×

தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு தள்ளுபடி விற்பனை என போலி வெப்சைட்கள் மூலம் மக்களிடம் நூதன மோசடி: போலீசார் எச்சரிக்கை

முந்தைய காலத்தில் பொதுமக்கள் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட கடைக்கு நேரில் சென்று, ஒன்றுக்கு 10 முறை அந்த பொருளை பார்த்து, பின்னர் வீட்டிற்கு வாங்கி வருவது வழக்கம். தற்போதைய சூழலில் கடைகளுக்கு சென்று  பொருட்களை வாங்குவதை விட ஆன்லைனில் பதிவு செய்து பொருட்களை வாங்குவது அதிகரித்துள்ளது.  வீடு தேடி வந்து பொருட்களை கொடுத்து அதற்கான  பணத்தை பெற்று செல்கின்றனர். பணத்தை செலுத்திய பிறகே பொருட்கள் தரும்  நிறுவனங்களும் உள்ளன.

தற்போது, தீபாவளியை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பொருட்களுக்கு சலுகைகளை வாரிவாரி வழங்குகின்றன. குறிப்பாக, பல முன்னணி நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அள்ளி வீசுகின்றன. இந்த சலுகை விற்பனை குறித்த விளம்பரங்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், கூகுள் உள்ளிட்ட வலைதளங்களில் இடம்பெறுகின்றன. இதை பார்த்து பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த பொருட்களை ஆன்லைனில் பதிவு செய்து வாங்குகின்றனர்.

இதை பயன்படுத்தி சில மோசடி கும்பல்கள், பிரபல நிறுவனங்களின் பொருட்களை குறைந்த விலைக்கு விற்பதாக சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்கின்றனர். போலி இணையதளம், போலி பேஸ்புக் ஐடி என  தொடர்ச்சியாக ஏமாந்து வந்த மக்கள் தற்போது புதிதாக இன்ஸ்டாகிராம்  பக்கத்திலும் ஏமாற தொடங்கியுள்ளனர். யார் பொருளை விற்கிறார், எந்த பொருள்  விற்கப்படுகிறது என்பதை எல்லாம் பார்க்காமல் பிராண்ட் எனப்படும் கம்பெனி  பெயரை மட்டும் பார்த்து ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள கைகடிகாரம் வெறும் ரூ.20  ஆயிரம் என்றவுடன் உடனடியாக அந்த லிங்கை தொட்டு உள்ளே சென்று பார்த்து  உடனடியாக ஆன்லைனில் பணம் கட்டி புக் செய்கின்றனர்.

அவ்வாறு, பணம்  கட்டியவுடன் குறிப்பிட்ட அந்த லிங்கை மீண்டும் தொடர்பு கொள்ள முடியாமல்  செயலிழந்து போகிறது. இதுபோன்ற பல புகார்கள் தொடர்ந்து வந்தாலும் மக்களின்  ஆசை குறையவில்லை. இதனால் ஏமாற்றுபவர்களும் குறைவில்லை என்று கூறலாம். அந்த  வகையில், சமீபத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் பிரபல கம்பெனி பொருட்களை குறைவாக  விலையில் தருவதாக கூறி நூதன முறையில் பலரை மோசடி கும்பல் ஏமாற்றி வருகிறது.

இதேபோல், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த பொருளை நாம் பணம் கட்டி வாங்கிய பிறகு அந்த பார்சலில், கல்லோ அல்லது வேறு பொருளோ  இருக்கும் போது நம்மால் எதையும் செய்ய முடியாமல் போகிறது.  இதுபோன்று நாள்தோறும் ஏராளமானோர் ஏமாறும் நிலை உள்ளது. இதை தடுக்கும் வகையில் காவல்துறை சார்பில் டிவிட்டரில் எச்சரிக்கை பதிவு ஒன்று  வெளியாகியுள்ளது.  அதில், ‘‘தற்போது தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என  அடுத்தடுத்த பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில்  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் துணி வகைகள், நகை, பட்டாசு,  இனிப்பு  என்று பல பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி  வருகின்றனர். எனவே பண்டிகை நேரத்தில், பொதுமக்களை எளிதில் இணையதளம் வழியாக புதுப்புது வெப்சைட்கள் மற்றும் செயலிகள் மூலம் பல்வேறு சலுகைகளை அறிவித்து, சில மோசடி கும்பல் நூதன முறையில் பொதுமக்களிடம் பணத்தை ஏமாற்றி வருகிறது. பண்டிகை காலங்களில் இதுபோன்ற மோசடி கும்பலின் செயல்பாடு அதிகளவில் இருக்கும்.

இதனால் பண்டிகை கால சிறப்பு தள்ளுபடி என  ஆன்லைனில் பிரபல கம்பெனிகளின் பெயரில் மோசடி நபர்கள் கவர்ச்சி விளம்பரங்களை வெளியிடலாம். அதில் உள்ள லிங்க்கில் பொருட்களை வாங்க பணம் செலுத்தினால், அதன் பிறகு முடங்கிவிடுகிறது. இதுபோல் பலர் ஏமாந்துள்ளனர். எனவே, பொதுமக்கள்  கவனத்துடன் இருக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்
பொதுமக்கள் ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் போது, சம்பந்தப்பட்ட ஒரு நிறுவனம் செய்துள்ள தள்ளுபடி விற்பனை உண்மை தானா, அல்லது போலியா என்பதை உறுதி செய்து, அதன்பிறகு பணம் செலுத்த வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை மிக குறைந்த விலைக்கு விற்பதாக கூறினால், ஒன்றுக்கு இரு முறை விசாரித்துவிட்டு, அதன் உண்மை தன்மையை அறிந்து பிறகு பணம் செலுத்த வேண்டும். இணைய வழி நிதி மோசடி தொடர்பாக  புகார் அளிக்க, 1930 என்ற 24 மணி நேர இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு  கொள்ளலாம்.

பார்சலில்கைவரிசை
ஆன்லைனில் குறைவான விலையில் பொருட்கள் கிடைக்கின்றன என்று எண்ணி அதனை ஆர்டர் செய்யும் நபர்கள் முதலில் பணம் கட்ட வேண்டாம் என்றும், உங்கள் வீட்டிற்கு பொருள் வந்ததும் பணம் கட்டினால் போதும் என்றும் கூறி சிலர் பொதுமக்களை நம்ப வைக்கின்றனர். அதன்பிறகு உங்களது பார்சல் ஏர்போட்டில் கஷ்டம்சில் உள்ளது. அதனை கிளியர் செய்வதற்கு முன்பணம் கட்ட வேண்டும்.

அதனை நீங்கள் தான் தர வேண்டும் என்று கூறி ஆர்டர் செய்த பொருளின் விலை ரூ.1 லட்சம் என்றால் 20 சதவீத பணம் அதாவது ரூ.20 ஆயிரம் கட்ட வேண்டும் என்று கூறி அந்த பணத்தை ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்கின்றனர். அதன்பிறகு இரண்டு நாளில் பார்சல் வரும் என கூறி இணைப்பை துண்டித்து விடுகின்றனர். ஆனால் எந்த காலத்திலும் அந்த பார்சல் புக் செய்தவர்களின் வீடுகளுக்கு சென்று சேர்வதில்லை ஆர்டர் எடுத்துக்கொண்டு அதனை டெலிவரி செய்வது போன்று பில் ரெடி செய்து கொண்டு நூதன முறையில் கஷ்டம்ஸ் என்ற பெயரில் ரூ.20 ஆயிரம், ரூ.30 ஆயிரம் என தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர்.

ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள கைகடிகாரம் வெறும்
ரூ.20 ஆயிரம் என்றவுடன் உடனடியாக அந்த லிங்கை தொட்டு உள்ளே சென்று பார்த்து  உடனடியாக ஆன்லைனில் பணம் கட்டி புக் செய்கின்றனர். அவ்வாறு, பணம்  கட்டியவுடன் குறிப்பிட்ட அந்த லிங்கை மீண்டும் தொடர்பு கொள்ள முடியாமல்  செயல் இழந்து போகிறது.

Tags : Diwali ,Christmas ,New Year , Diwali, Christmas, New Year discount sale, fake website, fake scam on people`
× RELATED குரோதத்தை விடுத்து அன்பை விதைத்திடும் குரோதி புத்தாண்டு!