×

ஆர்டிஐ.யில் அதிர்ச்சித் தகவல் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என தெரியாது: ஒன்றிய அமைச்சகம் கைவிரிப்பு

மதுரை: மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என தெரியாது என்று ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஆர்டிஐயில் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று பிப்ரவரி 2015ல் அறிவித்து 7 ஆண்டுகள் ஆகிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி 4 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இன்னும் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள்  குறித்து ஆர்டிஐயில் (தகவல் அறியும் உரிமைச் சட்டம்) தென்காசியை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு, ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சக அதிகாரிகள் அளித்துள்ள பதிலில், ‘‘திட்ட மேலாண்மை நிறுவனத்தை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.  அக்டோபர் 2026ல் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் முடியும். கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்பது சார்ந்த தகவல்கள் இல்லை. மதுரை எய்ம்ஸ் திட்ட மொத்த மதிப்பீடான ரூ.1977.8 கோடியில், 82 சதவீதமான ரூ.1627.7 கோடியை ஜப்பானைச் சேர்ந்த ஜைகா நிறுவனம் வழங்கும். 20 சதவீத தொகையான ரூ.350.1 கோடியை ஒன்றிய அரசு பட்ஜெட் ஒதுக்கீட்டில்  வழங்கும். சுற்றுச்சுவர் கட்டுமானப்பணிகள் உள்பட முதலீட்டுக்கு முந்தைய பணிகள் 92 சதவீதம் முடிவடைந்துள்ளது. அதற்காக ரூ.12.35 கோடி தொகை விடுவிக்கப்பட்டுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாண்டியராஜா கூறும்போது, ‘‘தமிழ்நாட்டுக்கு பின் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் எல்லாம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு திறப்பு விழா கண்டு வருகிறது. ஆனால் மதுரை எய்ம்ஸ்க்கு மட்டுமே காரணங்கள்  கூறப்பட்டு காலம் தாழ்த்தப்பட்டு  வருகிறது.  நிலம் கையகப்படுத்துதல், கடன் ஒப்பந்தம் கையெழுத்து என்று காலம் தாழ்த்தப்பட்ட நிலையில் தற்போது திட்ட மேலாண்மை நிறுவனத்தை இறுதி செய்தல், வரைபடம் தயாரித்தல், கட்டுமான நிறுவனத்தை இறுதி செய்தல் என இன்னும் எத்தனை  ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் என்பதே தெரியவில்லை. இது மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும் காலதாமதம் செய்யாமல் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கு ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.


Tags : Madurai ,AIIMS ,Union Ministry , Shocking news in RTI: Madurai AIIMS construction not sure when to start: Union Ministry hands down
× RELATED மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் வழக்கு:...