×

3 வகையான கேள்வி தாளுடன் மாணவர் நுழைவு சேர்க்கை தேர்வை குழப்பம் இல்லாமல் நடத்த வேண்டும்: சென்னை கணிதவியல் கழகத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மாணவர் சேர்க்கைக்கு மூன்று வெவ்வேறு தேதிகளில், வெவ்வேறு வினாதாள்களுடன் நுழைவு தேர்வு நடத்தியது சட்டத்திற்கு விரோதமானது என்று தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், எதிர்காலத்தில் இதுபோன்ற குழப்பங்களை தவிர்க்க வேண்டும் என்று சென்னை கணிதவியல் கழகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. சென்னை கணிதவியல் கழகத்தில் 116 இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு கடந்த மே 22ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கபட்டது. ஆனால் வேறு தேர்வுகள் குறுக்கிட்டதன் காரணமாக மே 23 மற்றும் ஜூன் 17 தேதிகளில் 3 வெவ்வேறு வினாத்தாளுடன் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 22ம் தேதி தேர்வு எழுதியவர்களில் 45 பேரும், 23 தேதி தேர்வு எழுதியவர்களில் 45 பேரும், ஜூன் 17ம் தேதி தேர்வு எழுதியவர்களில் ஒருவரும் தேர்வு செய்யபட்டனர்.
 
இந்த நிலையில், மூன்று முறைகள் வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு வினாத்தாள்கள் மூலமாக தேர்வு நடத்தியதால் தனக்கு இடம் கிடைக்க வில்லை என்று மதுமிதா என்ற மாணவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், ஒரு படிப்பிற்கான நுழைவு தேர்வு என்பது ஒரு வினாத்தாள் மூலம், ஒருமுறை தான் நடத்தப்பட வேண்டும். வேறு தேர்வுகள் குறுக்கிடுவதாக இருந்தால், இந்த தேர்வை வேறு தேதிக்கு மாற்றி இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் ஒரு படிப்பிற்கு 3 வினாத்தாள்களுடன் 3 தேர்வு நடத்தியது சட்ட விதோதமானது.இந்த தேர்வு நடைமுறை ரத்து செய்யப்பட வேண்டியதுதான் என்றாலும், ஏற்கனவே மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகள் தொடங்கியபிறகு இந்த நடைமுறையை ரத்து செய்வது முறையாக இருக்காது.

எனவே, ஏற்கனவே இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் படி மனுதாரருக்கு மாணவர் சேர்க்கை வழங்க வேண்டும். குழப்பமான முறையில் இந்த நுழைவு தேர்வு நடந்துள்ளது. எதிர்காலத்தில் தகுதியான மாணவர்கள் பாதிப்பதை தவிர்க்கும் வகையில் குழப்பங்கள் ஏதும் இல்லாமல் கணிதவியல் கழகம் தேர்வை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags : ICourt ,Madras Institute of Mathematics , Admission test with 3 types of question paper should be conducted without confusion: iCourt orders Madras Institute of Mathematics
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...