×

சென்னை விமான நிலையத்தில் ரூ.2.36 கோடி போதைப்பொருள் பறிமுதல்: எத்தியோப்பிய பயணி கைது

சென்னை: சென்னைக்கு ரூ.2.36 கோடி மதிப்புடைய 4.729 கிலோ மெத்தோகுயிலோன் போதைப்பொருளை கடத்தி வந்த எத்தியோப்பியாவை சேர்ந்த பயணி கைது செய்யப்பட்டார். எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபா நகரில் இருந்து, எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்  விமானம் சென்னை சர்வதேச விமானநிலையம் வந்தது. அந்த விமானத்தில் பெருமளவு போதைப்பொருட்கள் கடத்தி வருவது வழக்கமாக இருப்பதால், அந்த விமான பயணிகளிடம் சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறையினர் தீவிர சோதனை நடத்துவது வழக்கம். அதுபோல் விமான பயணிகளை சுங்கத்துறையினர் தீவிர சோதனை செய்தனர். அந்த விமானத்தில் வந்த எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த கொய்டாம் அரேகே வோல்டே மைக்கேல் (38) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பயணியை நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது அந்த பயணி முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

இதையடுத்து பயணியின் உடைமைகளை சோதித்தனர். அதில் மறைத்து வைத்திருந்த 4.729 கிலோ மெத்தோகுயிலோன் என்ற போதைப்பொருளை கைப்பற்றினர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.2.36 கோடி. போதைப்பொருளை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் எத்தியோப்பியா நாட்டு பயணியை கைது செய்தனர். விசாரணையில், அவர் சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. சென்னையில் யாரிடம் போதைப்பொருளை கொடுக்க வந்தார் என்று விசாரணை நடந்து வருகிறது. எத்தியோப்பியா நாட்டிலிருந்து வரும் விமானத்தில் போதை கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Chennai airport , Rs 2.36 crore worth of drugs seized at Chennai airport: Ethiopian passenger arrested
× RELATED சென்னை விமான நிலையம் உள்ளிட்ட 3...