தீபாவளியை முன்னிட்டு தியேட்டர்களில் சிறப்பு காட்சிகள்: 7 நாட்களுக்கு கோலாகலம்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 27ம் தேதி வரை சிறப்பு காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கடந்த 12ம் தேதி கடிதம் அனுப்பப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு கார்த்தியின் சர்தார் மற்றும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் ஆகிய படங்கள் இன்று திரைக்கு வருகின்றன. இந்தப் படங்களுக்கான புரமோஷன் நிகழ்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அத்துடன் கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரின் கடைசி இரண்டு படங்களான டான், பொன்னியின் செல்வன் ஆகியவை தமிழகத்தில் மட்டுமல்லாமல் பல இடங்களில் வெற்றி அடைந்தன.

இதனால் அவர்கள் நடித்துள்ள சர்தார் மற்றும் பிரின்ஸ் படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகும் அந்த இரண்டு திரைப்படங்களுக்கும் சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் கடிதம் எழுதினர்.இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 27 ஆம் தேதி வரை தொடர்ந்து 7 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் சிறப்பு காட்சிகள் திரையிட திரையரங்கு உரிமையாளர்களுக்கு தமிழக அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது. அதன்படி இந்த 7 நாட்களும் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்படும்.

Related Stories: