யு 17 மகளிர் உலக கோப்பை: இன்று முதல் காலிறுதி ஆட்டங்கள்

நவி மும்பை: இந்தியாவில் முதல் முறையாக நடைபெறும் யு17 மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டியின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. மொத்தம் 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று ஆட்டங்கள் நடந்தன.  போட்டியை நடத்தும் இந்தியா, மொரோகோ, சிலி, நியூசிலாந்து, மெக்சிகோ, சீனா, கனடா பிரான்ஸ் ஆகிய நாடுகள் லீக் சுற்றுடன் வெளியேறின. இந்தியா தான் விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்தது. அதே நேரத்தில் ஏ பிரிவில் இருந்து   அமெரிக்க ஒன்றியம், பிரேசில், பி பிரிவில் இருந்து ஜெர்மனி, நைஜிரியா, சி பிரிவில் இருந்து கொலம்பியா, ஸ்பெயின், டி பிரிவில் இருந்து ஜப்பான், தான்சானியா ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.

இரண்டு நாட்கள் ஓய்வுக்கு பிறகு காலிறுதி சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. மாலையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் அமெரிக்க ஒன்றியம்-நைஜிரியா மகளிர் அணிகள் களம் காணுகின்றன.  தொடர்ந்து இரவில் நடைபெறும் 2வது காலிறுதியில்  ஜெர்மனி-பிரேசில் நாடுகள் மோத உள்ளன. இந்த 2 ஆட்டங்களும் நவி மும்பை நகரில் நடைபெறும். கோவாவில் நாளை மாலை நடைபெறும் 3வது காலிறுதியில்  கொலம்பியா-தான்சானியா அணிகளும்,  இரவில் நடைபெறும் கடைசி காலிறுதியில்  ஜப்பான்-ஸ்பெயின் நாடுகளும் நேருக்கு நேர் சந்திக்கின்றன. இவற்றில் வெற்றி பெறும் அணிகள் அக்.26ம் தேதி நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில் விளையாட தகுதிப் பெறும். இறுதி ஆட்டம் அக்.30ம் தேதி நவி மும்பையில் நடக்கும்.

Related Stories: