பிரபல நடிகை பார்வதி நாயர் வீட்டில் ரூ.9 லட்சம் வைரம் பதித்த 2 வாட்ச் திருட்டு: புதுக்கோட்டை வாலிபர் சிக்கினார்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில், பிரபல நடிகை பார்வதி நாயர் வசித்து வருகிறார். இவர், ‘என்னை அறிந்தாள், நிமிர்ந்து நில்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில்,, நான் புதிய படப்பிடிப்புக்காக வெளியூர் சென்று இருந்தேன். கடந்த 18ம் தேதி இரவு வீட்டிற்கு வந்தேன். அப்போது, எனது படுக்கை அறையில் உள்ள பீரோவில் வைத்திருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள வைர கற்கள் பதித்த வாட்ச், ரூ.3 லட்சம் மதிப்புள்ள மற்றொரு வாட்ச், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் மற்றும் செல்போன், கேமரா காணவில்லை. எங்கள் வீட்டில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் புதுக்கோட்டையை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ்(30) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வருகிறார்.

நான் படப்பிடிப்புக்கு சென்ற பிறகு அவர் தான் எங்கள் வீட்டில் இருந்தார். இதனால் எனக்கு அவர் மீது சந்தேகம் உள்ளது. எனவே சுபாஷ் சந்திரபோசிடம் விசாரணை நடத்தி எனது விலை உயர்ந்த வாட்ச் உள்ளிட்ட பொருட்கள் மீட்டு தர வேண்டும் என்று புகார் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். நடிகை பார்வதி நாயர் அளித்த புகாரின் படி, நுங்கம்பாக்கம் போலீசார் புதுக்கோட்டையை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ், நடிகை பார்வதி நாயார் வீட்டு மேலாளர் பிரசாத் மற்றும் வீட்டை பராமரிப்பாளராக உள்ள இளங்கோவன், சமையல் செய்யும் சாந்தி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், புதுக்கோட்டை சுபாஷ் சந்திரபோசிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர், மற்ற நாட்களில் சினிமா தயாரிப்பாளர் ராஜேஷ் என்பவரின் அலுவலகத்தில் வேலை செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories: