×

மியான்மர் சிறையில் குண்டு வெடிப்பு: 8 பேர் உடல் சிதறி பரிதாப மரணம்

யாங்கூன்: மியான்மரின் 2வது மிகப்பெரிய நகரமான யாங்கூனில் அந்த நாட்டின் மிகப்பெரிய சிறைச்சாலை உள்ளது. நூற்றாண்டு பழமையான இந்த சிறையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் அரசியல் கைதிகள்.இந்த சிறையில் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பதாகவும், கைதிகள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும் பரவலாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை இந்த சிறையில் சில கைதிகளை பார்க்க அவர்களது உறவினர்கள் வந்திருந்தனர். அவர்கள் சிறையின் தபால் அறையில் காத்திருந்தனர்.

அப்போது தபாலில் வந்திருந்த 2 பார்சல்களை அங்கிருந்த சிறை ஊழியர்கள் பிரித்தனர். அப்போது அந்த பார்சல்களில் இருந்த வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. சிறையில் குண்டு வெடித்ததால் கைதிகள் மற்றும் சிறை ஊழியர்கள் மத்தியில் பெரும் பதற்றம் உருவானது. இந்த குண்டு வெடிப்பில் சிறை ஊழியர்கள் 3 பேர் மற்றும் கைதிகளை பார்க்க வந்திருந்த பார்வையாளர்கள் 5 பேர் என 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மேலும் 10 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதனிடையே சிறையில் குண்டு வெடித்தது குறித்து தகவல் கிடைத்ததும் ராணுவ வீரர்கள் உடனடியாக அங்கு விரைந்து சிறை முழுவதையும் தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

படுகாயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த குண்டு வெடிப்புக்கு உடனடியாக எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. மியான்மரில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை  ராணுவம் கைப்பற்றியதற்கு எதிராக அங்கு பல்வேறு கிளர்ச்சி படைகள் உருவாகி இருப்பதும், அவர்கள் ராணுவத்துக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Tags : Myanmar , Myanmar prison blast: 8 dead
× RELATED ஆங் சான் சூகி வீட்டு சிறைக்கு மாற்றம்