×

கடல் அட்டை மீதான தடையை நீக்க கோரி ஒன்றிய அமைச்சர்களிடம் ராமநாதபுரம் எம்பி மனு

ராமநாதபுரம்: மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கடல் அட்டை மீதான தடையை நீக்க கோரி ஒன்றிய அமைச்சர்களிடம் ராமநாதபுரம் எம்பி கோரிக்கை மனு அளித்தார். இதுதொடர்பாக ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா ஆகியோரிடம் ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி அளித்த கோரிக்கை மனு: கடல் அட்டை பிடிக்க ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. ஆனால், கடல் அட்டை என்பது அழியக்கூடிய உயிரினமல்ல, பெருகக் கூடிய உயிரினம் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

அண்டை நாடான இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கடல் அட்டை பிடிக்க தடையில்லை. கடல் அட்டைக்கு இந்தியாவில் மட்டும் தடை விதித்துள்ளதால், மீன்பிடியின் போது தவறுதலாக கடல் அட்டைகள் மீனவர்களின் மீன்வலையில் சிக்கினாலும் மீனவர்கள் தண்டிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதித்துள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கடல் அட்டைக்கு ஒன்றிய அரசு விதித்துள்ள தடையை நீக்குவதற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்திய வனத்துறை பொது இயக்குநர் டைரக்டர் ஜெனரலிடம ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சர் முன்னிலையில் நவாஸ் கனி எம்பி ஆலோசனையும் மேற்கொண்டார்.

Tags : Ramanathapuram ,Union , Ramanathapuram MP petitions Union Ministers to lift ban on offshore cards
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...