×

திருவனந்தபுரத்தில் குடும்ப தகராறில் விபரீதம்; மனைவியை கழுத்தை நெரித்து கொன்று ரியல் எஸ்டேட் அதிபர் தூக்கில் தற்கொலை: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் குடும்பத் தகராறில் மனைவியை கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொன்று அதே கயிற்றின் மறுமுனையில் கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இருவரும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் கமால் ராபி (52). அவரது மனைவி தஸ்னீம் (42). குலசேகரத்தை சேர்ந்தவர் ஆவார். திருமணத்திற்குப் பிறகு இந்த தம்பதி திருவனந்தபுரத்தில் குடியேறினர். அதன்படி கமலேஸ்வரத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

துபாயில் பணிபுரிந்து வந்த கமால் ராபி கடந்த 6 வருடங்களுக்கு முன்பு அங்கிருந்து திரும்பி ஊருக்கு வந்தார். அதைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் கார் ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தினார். கொரோனா காரணமாக வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்து காணப்பட்டார். அதன் பிறகு ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இதற்கிடையே கமால் ராபிக்கும், அவரது மனைவி தஸ்னீமுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக தஸ்னீம் அருகில் உள்ள தனது தங்கையின் வீட்டில் வசித்து வந்தார்.

பகல் நேரங்களில் குழந்தைகளுக்கு உணவு சமைப்பதற்காக மட்டும் அவரது வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் அவர்களது மூத்த மகன் நேற்று மாலை கல்லூரி முடிந்து வீட்டுக்கு திரும்பினார். ஆனால் நீண்ட நேரமாக கதவைத் தட்டியும் யாரும் திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் உடனே பூந்துறை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் கதவை உடைத்து திறந்து பார்த்தனர்.
அப்போது படுக்கை அறையில் தஸ்னீம் இறந்த நிலையில் கிடந்தார். அருகில் கழிப்பறை ஜன்னலில் கமால் ராபி தூக்கு போட்டு இறந்த நிலையில் காணப்பட்டார்.

தொடர்ந்து 2 பேரது உடல்களையும் போலீசார் கைபற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கமால் ராபியின் வீட்டில் இருந்து ஒரு கடிதம் ஒன்று கிடைத்தது. அதில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சம்பவத்திற்கு பல நாட்களுக்கு முன்பே கடிதத்தை கமால் ராபி எழுதியிருந்தது தெரியவந்தது.

மனைவியை கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொன்ற பிறகு அதே கயிற்றின் மறுமுனையில் கமால் ராபி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் கேரளா மற்றும் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Thiruvananthapuram ,Kanyakumari , Tragedy in family dispute in Thiruvananthapuram; Real estate tycoon commits suicide by strangling his wife: People from Kanyakumari district
× RELATED கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில்...