பெங்களூருவில் திருவள்ளுவர் சிலையின் பீடம் தகர்ப்பு: பாஜக நிர்வாகிகளை கைது செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்..!

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள திருவள்ளுவர் சிலை பீடத்தை சட்ட விரோதமாக இடித்த பாஜக நிர்வாகியை கைது செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2009ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள அல்சூர் ஏரி கரையில் அப்போதைய முதலமைச்சராக இருந்த எடியூரப்பா தலைமையில் நடந்த விழாவில் அன்றைய தமிழக முதலமைச்சர் கலைஞர் திறந்து வைத்தார். இந்த நிலையில் சிலை அமைத்துள்ள பூங்காவை புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்து சிவாஜி நகர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரிஸ்வான் அர்சத் பணிகளை துவங்கி உள்ளார். திருவள்ளுவர் சிலையை சுற்றி பிரம்மாண்ட பீடம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் சிலைக்கு கீழே இருந்த எடியூரப்பா பெயர் பொறித்த கல்வெட்டு மறைக்கப்பட்டதாக கூறி பாஜகவினர் சிலர் நேற்று ஜேசிபி வாகனத்தை கொண்டு பீடத்தை இடித்து தள்ளினர். இந்த சம்பவத்தை கண்டித்து திருவள்ளுவர் சிலை எதிரே இன்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த காந்திநகர் சட்டமன்ற உறுப்பினர் தினேஷ் குண்டுராவ், மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்வேறு சமூக ஆர்வலர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளும் போராட்டத்தில் பங்கேற்று பாஜகவினரின் செயலை கண்டித்து முழக்கங்களை எழுப்பின.

Related Stories: