×

சென்னையிலுள்ள சாலைகளின் போக்குவரத்து நிலைகளை உடனே தெரிந்து கொள்ள செல்போன் செயலியை தொடங்கி வைத்தார் காவல் ஆணையர்

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னையிலுள்ள சாலைகளின் போக்குவரத்து நிலைகளை உடனே தெரிந்து கொள்ள ‘Road Ease’ என்ற செல்போன் செயலியை துவக்கி வைத்தார். சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், சாலையைப் பயன்படுத்துபவர்களுக்கு வசதியான பயணத்தை எளிதாக்குவதற்கும் சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறை அதிக முயற்சிகளை எடுத்து வருகிறது. போக்குவரத்து காவல் ஆளிநர்கள், ரெக்கர், ரோந்து வாகனங்கள் மற்றும் மார்ஷல்கள் மற்றும் பல்வேறு போக்குவரத்து மேம்பாடுகளின் மூலம் அனைத்து முயற்சிகளும் செய்யப்படுகின்றன. மேலும், போக்குவரத்து தொடர்பான தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை முன்னணியில் உள்ளது.

நிரந்தர போக்குவரத்து மேம்பாடு, CMRL மற்றும் மழைநீர் வடிகால் போன்ற குடிமராமத்து பணிகள் அல்லது போராட்டம் போன்ற ஒரு குறிப்பிட்ட தற்காலிக சூழ்நிலையை சமாளிக்க பல நேரங்களில் குறிப்பிட்ட சாலையை ஒரு வழி அல்லது இரு வழிகளையும் மூட வேண்டியுள்ளது. இந்த சாலை மூடப்பட்டு மாற்றுப்பாதை செய்யப்படும் போதெல்லாம், ஒரு செய்திக்குறிப்பு கொடுக்கப்பட்டு சமூக வலைதளங்களிலும் அறிவிக்கப்படுகிறது. அவ்வாறு செய்யும்போது, போக்குவரத்து தொடர்பான Google வரைபடத்தில் பின்வரும் சிரமங்கள் காணப்படுகின்றன:

1. மூடப்பட்ட சாலையை Google மேப் உடனடியாகக் காட்டாது. Google மேப்பைப் பயன்படுத்தும் சாலைப் பயனாளிகளுக்கு, வரைபடத்தில் உள்ள மூடப்பட்ட சாலை அல்லது திசைதிருப்பல் பற்றி உடனடியாகத் தெரியவராது.

2. சில நேரங்களில் போராட்டம், வாகனம் பழுது அல்லது வாகன விபத்து போன்ற திடீர் செயல்பாடுகளை கருத்தில் கொண்டு, ஒரு சாலையை உடனடியாக மூட வேண்டும் என்றால், பத்திரிகைக் குறிப்பைக் கொடுக்க நேரமிருக்காது. அதை சமூக ஊடகங்களில் தெரிவித்திருந்தாலும், சாலையைப் பயன்படுத்துபவர்கள் அதை கவனித்திருக்க மாட்டார்கள்.

மேற்கண்ட சிரமங்களைக் கருத்தில் கொண்டு பல்வேறு முறைகளை ஆராய்ந்து, M/s. Lepton என்ற நிறுவனத்துடன் இணைந்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை ஒரு ஏற்பாட்டைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை ஒரு குறிப்பிட்ட சாலையை மூடுவது மற்றும் அதன் கால அளவு குறித்து M/s Lepton-க்கு தெரிவிக்கும். M/s.Lepton அதனை ‘roadEase’ என்ற செயலி மூலம் 15 நிமிடங்களுக்குள் கூகுள் மேப்பில் புள்ளியிடப்பட்ட சிவப்பு கோட்டுடன் மூடப்பட்ட சாலைகளை காண்பிக்கும். அதே நேரத்தில், மூடப்பட்ட பிறகு வாகனங்கள் செல்லக்கூடிய சிறந்த வழியையும் வரைபடம் காண்பிக்கும்.

மேற்கண்ட செயலியின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து கடந்த நான்கு நாட்களாக சோதனை செய்து, வெற்றிகரமாக நிறுவப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (20.10.2022) காவல் ஆணையரகத்தில், சென்னையிலுள்ள சாலைகளின் போக்குவரத்து நிலைகள் குறித்து உடனுக்குடன் Google Mapல் அறிவிக்கும் ‘roadEase’ செயலியை தொடங்கி வைத்தார். இந்த புதிய ஏற்பாடு நீண்டகால அடிப்படையில், சென்னையின் சாலை பயனாளர்களுக்கு எந்த ஒரு சாலை மூடல் மற்றும் மாற்றுப்பாதையை நிகழ்நேர அடிப்படையில் தெரிவிக்கவும், பயண நேரம் மற்றும் கிடைக்கக்கூடிய மாற்று பாதைகளை மதிப்பிடவும் பயன்படும்.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தனது சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்திற்கான தனது முயற்சிகளைத் தொடரும் என்ற வாக்குறுதியை மீண்டும் தெரியப்படுத்துகிறது. இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் திரு.கபில்குமார் சி. சரட்கர், இ.கா.ப., போக்குவரத்து துணை ஆணையாளர்கள் திரு.ஹர்ஷ் சிங், இ.கா.ப., (வடக்கு), திரு.சமய்சிங் மீனா, இ.கா.ப., (கிழக்கு), Lepton நிறுவனத்தின் Head Data Products திரு.விஜய்குமார் தாட்வாலியா. காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Police Commissioner ,Chennai , The Police Commissioner launched a cell phone app to instantly know the traffic conditions of the roads in Chennai
× RELATED சினிமா பிரபலங்கள், பொதுமக்கள்...