×

தமிழகம் முழுவதும் கைவரிசை; திருட்டு தொழிலில் ராஜா-ராணி குமரியில் தம்பதி அதிரடி கைது

மார்த்தாண்டம்: மதுரை எல்லிஸ்நகரை சேர்ந்தவர் சித்திரைவேலு (38). அவரது மனைவி பார்வதி (34). எப்படியாவது பணக்காரனாக வேண்டும் என்று இந்த தம்பதி திட்டமிட்டுள்ளனர். அதற்காக திருட்டு தொழிலை தேர்ந்தெடுத்துள்ளனர்.  ஒரே ஊரில் தொடர்ந்து திருடினால் போலீசாரிடம் மாட்டிக்கொள்வோம் என்று புத்திசாலித்தனமாக யோசித்த சித்திரைவேலு, தமிழகம் முழுவதும் கைவரிசை காட்ட முடிவு செய்தார். அதன்படி ஒவ்வொரு பகுதியாக மனைவியுடன் சென்று கைவரிசை காட்ட தொடங்கினார். மக்களோடு மக்களாக இருந்து திருடினால் எளிதாக தப்பித்துவிடலாம் என்று திட்டமிட்டு, 2 பேரும் மக்கள் கூட்டம் அதிகமுள்ள பகுதிகளான பஸ் நிலையம், பூங்கா என்று சுற்றுவார்கள்.

பிக்பாக்கெட் அடிப்பது, பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் செயின் பறிப்பது ஆகியவற்றை வெற்றிகரமாக அரங்கேற்றி வந்துள்ளனர். தனித்தனியாக கொள்ளையடித்த பிறகு, இருவரும் ஒன்றாக சந்தித்து, அன்றைய நாளில் எவ்வளவு கலெக்‌ஷன் ஆகி இருக்கிறது என்பதை கணக்குபோட்டு பார்ப்பார்கள். பண்டிகை காலங்கள் வந்துவிட்டால் போதும் 2 பேரும் குஷியாகி விடுவார்களாம். எந்தெந்த ஊரில் எந்தெந்த திருவிழாக்கள் பிரபலமானது என்பதை ஏற்கனவே திட்டமிட்டு அன்றைய நாளில் அங்கு சென்றுவிடுவார்களாம்.

இவர்களின் பிரதானமான டார்கெட் பெண்கள், குழந்தைகள் தான். ஏனெனில் அவர்களிடம் இருந்து எளிதாக கொலுசு, நகைகளை திருடிவிடமுடியும் என்பது இவர்களின் எண்ணம். மேலும் திருடிய நகைகளை வந்த விலைக்கு அன்றே விற்று பணமாக்கி விடுவார்களாம். இப்படி மதுரையில் தொடங்கிய தம்பதியின் திருட்டு பயணம் தமிழகம் முழுவதும் ஜோராக நடைபெற்றுள்ளது. கடந்த 2020ம் ஆண்டில் நாகர்கோவிலுக்கு வந்தவர்கள், 2 பெண்களிடம் இருந்து 5, 3 பவுன் நகைகளை சித்திரைவேலு, பார்வதி தம்பதி இணைந்து திருடி உள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.

அப்போது பல இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களில் சித்திரைவேலு-பார்வதி தம்பதியின் உருவம் சிக்கியது. அதை அடிப்படையாகக் கொண்டு தனிப்படை போலீசார் இருவரையும் தேடி வந்தனர். இந்த நேரத்தில் திருட்டு தம்பதி நாகர்கோவிலில் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டது. தமிழகம் முழுவதும் இந்த திருட்டு தம்பதி மீது 60க்கும் அதிகமான திருட்டு வழக்குகள் உள்ளன. இந்த தம்பதி போலீசுக்கு கடந்த 3 ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்து வந்துள்ளனர். தீபாவளி பண்டிகையையொட்டி மீண்டும் குமரி மாவட்டத்தில் கைவரிசை காட்டலாம் என திட்டமிட்டு மார்த்தாண்டம் வந்துள்ளனர்.

இதை அறிந்த போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று மார்த்தாண்டம் ரெயில் நிலையம் அருகே சித்திரைவேலு-பார்வதி தம்பதியை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதைத்தொடர்ந்து சித்திரைவேலு குழித்துறை சிறையிலும், பார்வதி தக்கலை பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர். தற்போது 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படை போலீசார் திட்டமிட்டு உள்ளனர். தமிழகம் முழுவதும் திருட்டு தொழிலில் ராஜா-ராணியாக விளங்கிய சித்திரைவேலு-பார்வதி தம்பதி மார்த்தாண்டத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Tags : Tamil Nadu ,Kumari , Line up across Tamil Nadu; Couple arrested in Raja-Rani Kumari for theft
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...