×

திருவண்ணாமலை மாவட்டத்தில் விடிய விடிய கனமழை: 112 ஏரிகள் முழுமையாக நிரம்பியது; சாத்தனூர் அணையில் இருந்து 12,870 கன அடி நீர் வெளியேற்றம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில், விடிய விடிய கனமழை பெய்தது. தொடரும் மழையால், 112 ஏரிகள் முழுமையாக நிரம்பியிருக்கிறது. எனவே, விவசா்யிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும், தெற்கு அந்தமானை ஒட்டிய வங்கிக் கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் வளிமண்டல சுழற்சி, புயல் சின்னமாக உருவாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனால், அடுத்த சில நாட்களில் கன மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பகலில் கடும் வெயிலும், இரவில் கனமழையும் பெய்கிறது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை, மாவட்டத்தின் பல பகுதிகளில் விடிய விடிய பெய்தது. அதனால், நீர்நிலைகள் வெகுவாக நிரம்பி வருகின்றன. மாவட்டத்தில் அதிகபட்சமாக, வெம்பாக்கத்தில் 42 மிமீ மழை பதிவானது.  ஆரணியில் 32.40 மிமீ, செய்யாறில் 10 மிமீ, செங்கத்தில் 12.20 மிமீ, ஜமுனாமரத்தூரில் 31 மிமீ, வந்தவாசியில் 2 மிமீ, போளூரில் 13.80 மிமீ,  திருவண்ணாமலையில் 28 மிமீ, தண்டராம்பட்டில் 13.40 மிமீ, கலசபாக்கத்தில் 22 மிமீ, சேத்துப்பட்டில் 10.60 மிமீ மழை பதிவானது.

தொடரும் மழையால், திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 697 ஏரிகளில், 112 ஏரிகள் முழுமையாக நிரம்பியிருக்கிறது. மேலும், 45 ஏரிகள் 75 சதவீதமும், 317 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பியிருக்கிறது. எனவே, வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் முன்பே, மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் முழுமையாக நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சாத்தனூர் அணையின் மொத்த உயரமான 119 அடியில், 114.70 அடி நிரம்பியிருக்கிறது. அணையின் நீர் மொத்த கொள்ளளவு 7,321 மி.கனஅடியாகும். அதில், 6,378 மி.கன அடி நிரம்பியிருக்கிறது.

மேலும், அணைக்கு தற்போது வினாடிக்கு 9270 கன அடி நீர் வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி, அணையில் இருந்த தென்பெண்ணை ஆற்றின் வழியாக 12,420 கன அடியும், கால்வாய் வழியாக 450 கன அடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. எனவே, தென்பெண்ணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags : Thiruvannamalai district ,Satanur dam , Thiruvannamalai, Vidya Vidya Heavy rain, 112 lakes completely filled, Chatanur Dam,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 3...