மீண்டும் பட்டம் வெல்ல விரும்புகிறோம்; உலகக்கோப்பையில் அணியை வழி நடத்த உற்சாகமாக இருக்கிறேன்: ரோகித்சர்மா பேட்டி

மெல்போர்ன்: ஐசிசி டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நாளை மறுநாள் தொடங்குகிறது. குரூப் 2ல் இடம் பிடித்துள்ள இந்திய அணி முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை வரும் 23ம் தேதி மெல்போர்னில் சந்திக்கிறது. இதற்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா அளித்துள்ள பேட்டி: உலக கோப்பையை நாங்கள் வென்று சிலகாலம் ஆகிவிட்டது. மீண்டும் உலகக் கோப்பையை வெல்ல விரும்புகிறோம், ஆனால் அதற்கு நாம் பல விஷயங்களைச் சரியாகச் செய்ய வேண்டும்.

இப்போது நாம் அரையிறுதி மற்றும் இறுதிபோட்டி பற்றி யோசிக்க முடியாது. சூப்பர் 12 சுற்றில் ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் கவனம் செலுத்தி முடிந்ததை செய்து சிறப்பாக தயார் செய்ய முயற்சிக்க வேண்டும். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்று முன்னேற முயற்சிப்போம், சரியான முறையில் போட்டிகளில் விளையாடி வெற்றி பெற முயற்சிப்போம். இந்தியா-பாகிஸ்தான் போட்டி எப்போதும் சிறப்பு வாய்ந்தது. இந்த போட்டியை காண ரசிகர்கள் அதிக அளவில் வருவதுடன், வீடுகளில் டி.வி.யிலும் போட்டியை பார்க்கின்றனர். இந்த சூழல் உற்சாகம் நிறைந்தது.

இந்தப் போட்டி இந்தியாவுக்கு முக்கியமானது. ஆனால் நாங்கள் எங்கள் மீது அழுத்தம் கொடுக்காமல் இருக்க முயற்சிக்கிறோம். ஒரு வீரராக நமது வேலை என்ன, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில்தான் எங்கள் கவனம் உள்ளது. இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பது பெரிய கவுரவம். கேப்டனாக எனது முதல் உலகக் கோப்பை, அதனால் நான் உற்சாகமாக இருக்கிறேன். இங்கு வந்து விசேஷமாக ஏதாவது செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. பயிற்சி ஆட்டங்கள் பயனுள்ளதாக இருந்தன. சொந்த மண்ணில் 2 தொடர்களை வென்றோம்.

இருப்பினும், ஆஸ்திரேலியாவில் விளையாடுவது வித்தியாசமான சவாலாக இருக்கும். சில வீரர்கள் முதல்முறையாக இங்கு விளையாடுகிறார்கள். அவர்களும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள வேண்டும். இதன் காரணமாக, இந்திய அணி சற்று முன்னதாகவே ஆஸ்திரேலியா வந்தடைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு ஆபத்து

ஆஸ்திரேலியாவில் தற்போது கோடை காலம். இதனால் மழை பெய்ய வாய்ப்பு குறைவு எனக் கணிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென்று போட்டி நடைபெறும் சமயங்களில் நிச்சயம் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக வரும் 23ம் தேதி இந்தியா, பாகிஸ்தான் லீக் போட்டி நடைபெறவுள்ள மெல்போர்ன் மைதானத்தில் மழைபெய்ய 80% வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டி மழையால் பாதிக்கப்படும். அபாயம் உள்ளது.

அப்ரிடியை எதிர்கொள்ள டெண்டுல்கர் டிப்ஸ்

இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியிருப்பதாவது: “ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் சர்வதேச போட்டிகளில் பெரிய ரன்கள் அடித்துள்ளனர். இவர்களுக்கு எப்படி எதிரணி பந்துவீச்சாளர்களை சமாளிக்க வேண்டும் என்பது நன்றாகவே தெரியும். ஆனால் பாகிஸ்தான் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடியை பார்க்கையில் அவர் பந்தை பிட்ச் செய்து உள்ளே எடுத்து வருகிறார், இது எதிர்கொள்வதற்கு சற்று கடினமான ஒன்றுதான். அவர் புல் லென்த்தில் பந்து வீசி பந்தை நேராக பேட்ஸ்மேன்கள் நோக்கி எறிகிறார். இதனால் அவரின் பந்தை சற்று பொறுமையாக கையாள வேண்டும். பந்து ஸ்விங்காகிறதா அல்லது நேராக வருகிறதா என்பதை உணர்ந்து ஆட வேண்டும், மைதானத்திற்கு ஏற்றவாறும் காற்று அடிக்கும் திசையை கணித்தும் விளையாட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு 30% தான் வாய்ப்பு

உலக கோப்பை டி.20 கிரிக்கெட் தொடரில் இந்தியா அரையிறுதிக்குள் நுழைய 30 சதவீதமே வாய்ப்பு இருப்பதாக முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார். ஆல் ரவுண்டர்கள் தான் ஒரு அணிக்கு மிகப்பெரிய பலம். அது உலகக் கோப்பை தொடர் மட்டுமல்ல வேறு எந்த தொடரானாலும் சரி. இந்திய அணிக்கு அப்படி ஒரு ஆல் ரவுண்டர் தான் ஹர்திக் பாண்டியா. பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் திறன் படைத்த வீரர். கேப்டன் ரோகித்துக்கு 6வது பவுலர் ஆப்ஷனை கொடுப்பதும் அவர் தான். ஜடேஜாவும் தரமான ஆல் ரவுண்டர். இந்தியா கோப்பையை வெல்லும் வாய்ப்பு உள்ளதா என்று கேட்டால் அதை சொல்வது ரொம்பவே கஷ்டம். அரையிறுதிக்குள் நுழைய 30 சதவீதம் மட்டும்தான் வாய்ப்புள்ளது என நான் கருதுகிறேன், என தெரிவித்துள்ளார்.

சூர்யகுமார் பேட்டிங் ஆர்டருக்கு கூடுதல் பலம்

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல்ஹக் அளித்துள்ள பேட்டி: “சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் இடம்பிடித்ததில் இருந்தே இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் வலுவாக உள்ளது. சூர்யகுமார் யாதவின் மூலம் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டருக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது என்பதே உண்மை. அவரால் அனைத்து ஷாட்களையும் அசால்டாக அடிக்க முடிகிறது. பந்துவீச்சாளர் யாராக இருந்தாலும் அவருக்கு பந்துவீசுவது சிரமம் தான். சூர்யகுமார் யாதவிற்கு அடுத்து ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் போன்றோர் இருப்பதால் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் குறையே சொல்ல முடியாத அளவிற்கு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: