×

திருவிடைமருதூர் அருகே துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ரூ.2 கோடியில் திருப்பணி: 7 ஆண்டுகளுக்குப் பிறகு துவங்கியது

திருவிடைமருதூர்: திருவிடைமருதூர் அருகே துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் பாலாலயம் செய்யப்பட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரூ.2 கோடி மதிப்பில் திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எண்ணற்ற கோயில்கள் தமிழர்களின் வரலாற்றையும், கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியலையும், தெய்வீகத்தையும் உள்ளடக்கிய நிலையில் காணப்படுகிறது. இவற்றில் சில கோயில்கள் கால வெள்ளத்தால் பராமரிப்பு இன்றி சிதைந்த நிலையில் காணப்படுகிறது.

குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட பகுதிகளில் வரலாற்று சிறப்புமிக்க, தொன்மையான கோயில்கள் ஆயிரம் ஆண்டுகளை கடந்து பழமையான கல்வெட்டு தகவல்களுடன் உள்ளன. அந்த வகையில் திருவிடைமருதூர் அருகே துக்காச்சி கிராமத்தில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோயில் விக்கிரம சோழன் காலத்து கல்வெட்டுகள் கொண்ட தொன்மை வாய்ந்தது.
இக்கோயில் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி (ராகு தலம்) கோயில் நிர்வாகத்தின் இணை கோயிலாக நிர்வகிக்கப்படுகிறது.

தமிழக அரசின் 13வது நிதிக்குழு மூலம் ரூ.55 லட்சத்தை முதல்கட்டமாக அறநிலையத் துறை ஒதுக்கீடு செய்து 2014ம் ஆண்டு பாலாலயம் செய்து திருப்பணி வேலை தொடங்கப்பட்டது. ஆனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை திருப்பணி வேலை செய்ய முடியாமல் பற்றாக்குறை உள்ளது என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக 7 ஆண்டுகளாக பணிகள் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் திருப்பணி வேலைகளை தொடங்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இந்நிலையில் அறநிலையத்துறை மூலம் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக ராஜகோபுரம், 2வது கோபுரம், மூலவர் விமானம், அர்த்தமண்டபம் பணிகள் ரூ.1 கோடி மதிப்பில் உபயதாரர்கள் மூலம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருநாகேஸ்வரம் கோயில் மேலாளர் நடராஜன் கூறுகையில், மதில் சுவர் பணிகள் மட்டும் ரூ.1.50 கோடிக்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. எனவே மொத்தம் ரூ.2 கோடிக்கும் மேலாக திருப்பணி வேலைகள் செய்ய வேண்டி உள்ளது. அறநிலையத் துறையின் நிதி ஒதுக்கீடு பெற்று தொடர்ந்து தொய்வு இல்லாமல் பணிகள் செய்யப்படும் என்றார்.

Tags : Dukachi ,Apadsakayeswarar ,Temple ,Tiruvidaimarudur , Thiruvidaimarudur, Dukachi Apadsakayeswarar Temple, Tirupani, opened after 7 years
× RELATED பெண் பாலியல் வன்கொடுமை – அர்ச்சகர் பணியிடை நீக்கம்