×

ரூ.32.93 கோடி மதிப்பீட்டில் சட்டக்கல்வி இயக்ககத்திற்கான ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை: ரூ.32.93 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள குற்றவழக்குத் தொடர்வு துறை இயக்ககம் மற்றும் சட்டக்கல்வி இயக்ககத்திற்கான ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டிடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், உள் (நீதிமன்றங்கள்) துறை சார்பில்  சென்னை, கீழ்ப்பாக்கம், மில்லர் சாலையில் 32.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள குற்றவழக்குத் தொடர்வு துறை இயக்ககம் மற்றும் சட்டக்கல்வி இயக்ககத்திற்கான ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

குற்ற வழக்குத் தொடர்வு துறை இயக்ககம் மாநிலத்திலுள்ள தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம், தலைமை குற்றவியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டுள்ள குற்ற வழக்குகளை திறம்பட நடத்துதல் மற்றும் அரசு குற்றவியல் வழக்கு நடத்துனர்களின் பணித்திறனை கண்காணித்தல் போன்றவற்றின் மீது முழுக்கட்டுப்பாடு செலுத்தும் இயக்ககம் ஆகும். சட்டக்கல்வி இயக்குநரகம் மாநிலத்தில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகளின் கல்வி மேம்பாடு மற்றும்  செயல்பாடுகளை நிர்வகிக்கும் இயக்குநரகம் ஆகும்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த  குற்ற வழக்குத் தொடர்வு துறை இயக்ககம் மற்றும் சட்டக்கல்வி இயக்ககங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டும் வகையில், சென்னை, கீழ்ப்பாக்கம், மில்லர் சாலையில் 1.18 ஏக்கர் நிலப்பரப்பில் 87,091 சதுர அடி கட்டடப் பரப்பளவில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் இரண்டு தொகுதிகளாக 32.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குற்றவழக்குத் தொடர்வு துறை இயக்குநரகம் மற்றும் சட்டக்கல்வி இயக்குநரகத்திற்கான ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டடம் கட்டப்படவுள்ளது.

இக்கட்டடத்தின் தரை தளத்தில் வாகன நிறுத்துமிடம், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம், மின்தூக்கிகள் போன்றவைகளும், குற்ற வழக்குத் தொடர்வு துறை இயக்ககத்தின் முதல் தளத்தில் இயக்குநர் அறை, பார்வையாளர் அறை, கலந்துரையாடல் அறை, அலுவலகப் பிரிவு, எழுத்துமனு பிரிவு, தகவல் அறியும் சட்டப் பிரிவு, கணினி அறை, பதிவக அறை போன்றவைகளும், இரண்டாம் தளத்தில் நூலகம், காத்திருப்புக் கூடம், இணை இயக்குநர் அறைகள், கணினி அறை, கலந்துரையாடல் அறை, மின்னணு வழி வழக்குப்பிரிவு, மூன்றாம் தளத்தில் மாட அமைப்பிலான  கூட்ட அரங்கம், சேவை அறை போன்றவைகள் அமைக்கப்படவுள்ளன.

சட்டக்கல்வி இயக்ககத்திற்கான முதல் தளத்தில் ஆலோசனைக்கான காத்திருப்பு இடம், பதிவறை, பொருட்கள் வைப்பறை, இரண்டாம் தளத்தில் காணொளி கூட்டரங்கு, காத்திருப்புக் கூடம், அலுவலகப் பிரிவு, நூலகம், கணினி அறை, பதிவக அறை, மூன்றாம் தளத்தில் பயிற்சிக் கூடங்கள் போன்றவைகள் அமைக்கப்படவுள்ளன. இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு.எஸ். ரகுபதி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.க. பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., குற்ற வழக்குத் தொடர்வு இயக்குநர் திருமதி சித்ரா தேவி, சட்டக்கல்வி இயக்குநர் திருமதி விஜயலட்சுமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள்  கலந்துகொண்டனர்.


Tags : K. Stalin , Rs.32.93 Crores, Legal Education Office Building, M.K.Stalin
× RELATED பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி...