×

கனமழையால் மீண்டும் உடைந்த கொல்லபட்டி தரைப்பாலம்: கிராமமக்கள் சாலை போக்குவரத்து துண்டிப்பு

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை அருகே ஆர்.கொல்லபட்டியில் பெய்த கனமழையால் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு உடைந்த தரைப்பாலம், தற்போது மீண்டும் உடைந்து கிராமமக்களின் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. எனவே புதிய பாலம் கட்டும் பணியை விரைந்து துவங்க வேண்டும் என இக்கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குஜிலியம்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி இரவு 2 மணிநேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

இதில் ஆர்.கொல்லபட்டியில் வறட்டாறு செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் உடைப்பு ஏற்பட்டு சுமார் 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. இதனால் இக்கிராமத்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட குடியிருப்பு மக்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதையடுத்து தரைப்பாலத்தை அகற்றி, இவ்வழித்தடத்தில் புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என இக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து காந்திராஜன் எம்எல்ஏ நேரில் சென்று உடைந்த பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பேரூராட்சி அதிகாரிகளிடம் புதிய பாலம் கட்ட மதிப்பீடு அறிக்கை (எஸ்டிமேட்) தயார் செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து பாளையம் பேரூராட்சி சார்பில், புதிய பாலம் கட்டுவதற்கு மதிப்பீடு அறிக்கை தயார் செய்து, பேரூராட்சி இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆர்.கொல்லப்பட்டியில் கனமழை பெய்தது. இதில் ஏற்கனவே உடைப்பு ஏற்பட்ட வறட்டாறு செல்லும் தரைப்பாலம் முற்றிலும் உடைந்து, பக்கவாட்டில் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டது.

 இதனால் அக்கிராம மக்களின் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு மழை பெய்யும் போது இந்த தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்ட போது, 2022ம் ஆண்டு மழைக்காலம் தொடங்கும் முன்பு தரைப்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஒரு ஆண்டாகியும் பாலம் கட்டும் துவங்கப்படாததால், தற்போது மீண்டும் தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பாளையம் பேரூராட்சி நிர்வாகம் புதிய பாலம் கட்டித்தர உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஆர்.கொல்லபட்டி கிராமமக்கள் கூறுகையில், ஆர்.கொல்லபட்டியில் வறட்டாறு செல்லும் சாலையில் இந்த தரைப்பாலம் உள்ளது. இதனால் ஆண்டுதோறும் பெய்யும் மழையின் போது, வறட்டாற்றில் இருந்து வரும் மழைநீர் முழுவதும் இந்த தரைப்பாலம் வழியே பெருக்கெடுத்து ஓடும். மழைநீர் வடிந்த பிறகே இந்த தரைப்பாலத்தை கடந்து செல்லும் நிலை இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு இப்பகுதியில் பெய்த கனமழையால் இந்த தரைப்பாலம் உடைப்பு ஏற்பட்டு, கிராமமக்களின் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து அடுத்து 2022ம் ஆண்டு பருவமழை துவங்கும் முன்பாக புதிய பாலம் கட்டும் பணி துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு ஆண்டாகியும் இப்பணி துவங்கப்படவில்லை.

இந்நிலையில் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால், உடைந்த பாலத்தில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு தற்போது சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமமக்கள் போக்குவரத்து மட்டுமின்றி பள்ளி செல்லும் மாணவர்களும் இச்சாலை வழியே கடந்து செல்ல முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பாளையம் பேரூராட்சி நிர்வாகம் புதிய பாலம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை உடனே துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

திட்ட அறிக்கை தயார்
இதுகுறித்து பாளையம் பேரூராட்சி தலைவர் பழனிச்சாமி கூறுகையில், ‘ஆர்.கொல்லப்பட்டியில் கடந்த ஆண்டு தரைப்பாலம் உடைப்பு ஏற்பட்ட போது அதனை பார்வையிட்டு, பின்னர் இங்கு புதிய பாலம் அமைக்க வேண்டும் காந்திராஜன் எம்எல்ஏ, மாவட்ட கலெக்டர் விசாகன் ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் கடந்த மாதம் திண்டுக்கல் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்ய வந்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் நேரடியாக இதுகுறித்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து ஆர்.கொல்லபட்டியில் ரூ.1.5 கோடி செலவில் புதிய பாலம் கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமான பணிகள் துவங்கப்படவுள்ளது’ என்றார்.

Tags : Kollapatti , Heavy rain, Kollapatti footbridge, villagers cut off road traffic
× RELATED குஜிலியம்பாறை ஆர்.கொல்லபட்டியில் ரூ.1.59...