×

MBBS படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓ.பி.சி.யினர் புறக்கணிப்பு: சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு

மதுரை: எம்.பி.பி.எஸ். படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓ.பி.சி.யினர் புறக்கணிக்கப்படுவதாக சு.வெங்கடேசன் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். ஒன்றிய அரசின் மருத்துவ மாணவர் சேர்க்கையின்போது ஒவ்வொரு மாநிலங்களில் இருந்தும் கிடைக்கபெறக்கூடிய இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான இடங்களை இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்பது விதி. மேலும் ஓ.பி.சி. இடஒதுக்கீடு தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில் ஓ.பி.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் பொதுப்பிரிவினரை சேர்க்கக்கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த காலங்களில் இருந்த ஓ.பி.சி. இடஒதுக்கீடு முழுமையாக பின்பற்றப்படவில்லை என்பது பிரதான வாதமாக இருந்த நிலையில், நீதிமன்றம் இத்தகைய உத்தரவை பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், எம்.பி.பி.எஸ். படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓ.பி.சி.யினர் புறக்கணிக்கப்படுவதாக சு.வெங்கடேசன் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். 2021 - 22 கல்வியாண்டில் ஓ.பி.சி. பிரிவினருக்கான 2169 எம்.பி.பி.எஸ். இடங்களில் 6 மட்டுமே நிரப்பப்பட்டது. பொதுப்பிரிவில் தேர்வு பெற்ற 2163 ஓ.பி.சி. மாணவர் எண்ணிக்கையும் இடஒதுக்கீடு அனுமதியாக கணக்கு வைப்பா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இடஒதுக்கீடு கோட்பாடு அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதாக சு.வெங்கடேசன் புகார் தெரிவித்துள்ளார். பொது போட்டியில் தகுதி அடிப்படையில் இடம்பிடித்த ஓ.பி.சி. மாணவர்களை ஒதுக்கீட்டு கணக்கில் கொண்டுவரக்கூடாது என்பது விதி. மாறாக 2021 - 22ல் பொதுப்போட்டியில் இடம்பிடித்த ஓ.பி.சி. மாணவர்களை இடஒதுக்கீட்டில் கணக்கிட்டதால் 2163 இடங்கள் இழக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags : All India ,MBBS ,RC ,Yener ,Venkatesan , MPBS, Allotment, OPC, Su Venkatesan MP.
× RELATED மராட்டியத்தில் இந்தியா கூட்டணி...