×

தர்மபுரி அருகே சொத்தை பிரித்து தராததால் கூலிப்படை ஏவி விவசாயியை வெட்டிக் கொன்ற மகன்: விபத்தில் இறந்தது போல் பள்ளத்தில் சடலம் வீச்சு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் அருகே தெற்கத்தியான்கொட்டாயைச் சேர்ந்தவர் முனியப்பன் (52). விவசாயி. இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி சந்திராவுக்கு(49), 2 மகள், ஒரு மகன் உள்ளனர். அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், 25 ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்த சந்திரா மகள், மகனுடன் தர்மபுரியில் வசித்து வருகிறார். அவர் பிரிந்து சென்றதும் பிரியா (37) என்ற பெண்ணை முனியப்பன் 2வது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர்.

இதனிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முனியப்பனின் 10 ஏக்கர் நிலத்தில் முதல் மனைவி சந்திராவின் மகன் திருமலை (28) பங்கு கேட்டு வந்துள்ளார். அவர் தர மறுத்ததால், நீதிமன்றத்தில் திருமலை வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் முனியப்பனுக்கு சாதமாக தீர்ப்பு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே மாந்தோப்பு பக்கமுள்ள சாலையோர 7 அடி பள்ளத்தில் முனியப்பன் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தார். பிரேத பரிசோதனையில் கழுத்து அறுக்கப்பட்டிருப்பதும், தலையில் வெட்டுக்காயம் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மகன் திருமலை, தந்தை முனியப்பனை கூலிப்படை வைத்து கொலை செய்தது தெரியவந்தது.

சொத்து விவகாரத்தில் தீர்ப்பு வந்த சில நாட்களிலேயே முனியப்னை கார் ஏற்றியும, கல்லால் தாக்கியும் கொலை செய்ய முயன்றதும் அதில் அவர் தப்பியதும் தெரியவந்தது. 3வது முறையாக நேற்று முன்தினம் மாலை காரில் வந்த 5 பேர் முனியப்பனை வழிமறித்து வெட்டிக்கொலை செய்துள்ளனர். விபத்தில் இறந்தது போல் நம்ப வைப்பதற்காக 7 அடி பள்ளத்தில் உடலை தூக்கி வீசி டூவீலரை மேலே போட்டுச்சென்றது தெரியவந்தது. மேலும் டூவீலரும், காரும் மோதியது போன்று காரின் சக்கர தடங்களை ஏற்படுத்தியிருப்பதும் தெரியவந்தது. இதுபற்றி கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், திருமலை உள்பட அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.


Tags : Dharmapuri , Son of mercenary AV farmer hacked to death for non-partition of property near Dharmapuri: body dumped in ditch as if died in accident
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...