×

கொள்ளிடத்தில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு கிராமங்களில் தவித்த 5,000 பேர் படகுகள் மூலம் மீட்பு: கடலாக மாறிய விளைநிலங்கள்

கொள்ளிடம்: கொள்ளிடத்தில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கால் கிராமங்களில் தவித்த 5ஆயிரம் பேர் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். விளை நிலங்களும் கடலாக மாறியது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணையில் அதிகளவில் தண்ணீர் திறக்கப்படுகிறது. நேற்று காலை நிலவரப்படி முக்கொம்புக்கு 2.01 லட்சம் கன அடி தண்ணீர் வந்தது. அங்கிருந்து காவிரியில் 64,523 கன அடியும், கொள்ளிடத்தில் 1,36,939 கன அடியும் திறந்து விடப்பட்டது. இதனால் ஆறுகளில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆண்டுகால வரலாற்றில், இந்த வருடம் ஐந்தாவது முறையாக உபரி நீர் அதிக அளவில் வெளியேற்றப்பட்டதால், மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதி வழியாக சென்று பழையாறு மீன்பிடி துறைமுகம் அருகே வங்க கடலில் கலந்து வருகிறது. நேற்றுமுன்தினம் வரை 320 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேட்டூர் அணையின் முழு கொள்ளளவு 90 டிஎம்சி. இதோடு ஒப்பிடுகையில் மூன்றரை மடங்கு தண்ணீர் கடலில் கலந்துள்ளது. கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கால் கொள்ளிடம் ஆற்றின் படுகையில் உள்ள நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளமணல், கோரைதிட்டு, மேலவாடி உள்ளிட்ட 5 கிராமங்களில் குடியிருப்புகளை மட்டுமன்றி விளை நிலங்களையும் நேற்று தண்ணீர் சூழ்ந்தது.

இதனால் அங்கு பயிரிடப்பட்டிருந்த  கத்தரி, வெண்டை நீரில் மூழ்கி வயல்கள் கடல்போல்  காட்சியளிக்கிறது. சாலை போக்குவரத்தும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. படுகை கிராமங்களில் வெள்ளநீர் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அப்பகுதியை சேர்ந்த 5ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான பகுதிக்கு தங்கள் உடமைகள் மற்றும் கால்நடைகளுடன் படகுகள் மூலம் நேற்று மீட்கப்பட்டு கொள்ளிடம் ஆற்றங்கரை, அனுமந்தபுரம், ஆச்சாள்புரம், அளக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி திருவானைக்காவல் அருகே கொள்ளிடக்கரையில் மண்அரிப்பால் கோயில் சுவர், சுவாமி சிலை ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. லால்குடியில் கரையில் மண் சரிவு ஏற்பட்டது. அதேபோல், ஸ்ரீரங்கம் கொள்ளிடம் செக்போஸ்ட் அருகே அழகிரிபுரத்தில் கொள்ளிடம் கரையோரம் உள்ள கருப்பண்ணசாமி கோயிலின் சுற்றுச்சுவர் வெள்ளத்தால் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. இதில் கோயில் சுற்றுச்சுவர் அருகில் இருந்த மதுரை வீரன் சிலையும் ஆற்றுக்குள் விழுந்தது. லால்குடி அருகே அன்பிலில் கொள்ளிடம் ஆற்றின் வடக்கு கரையில் மண் சரிவு ஏற்பட்டு கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

* 2,000 ஏக்கர் நெற்பயிர் முழ்கியது
அரியலூர் மாவட்டம் கோடாலிகருப்பூர் 7 கண் மதகில் நேற்று உடைப்பு ஏற்பட்டதால் கோடாலிகருப்பூர், அன்னங்காரம்பேட்டை, கீழக்குடிகாடு உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மேலும் அண்ணங்காரம்பேட்டை கிராமத்தை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ள நீர் தா.பழூர்-அண்ணங்காரம் பேட்டை சாலை தரைபாலத்தை மூழ்கடித்து செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

* ஏலகிரி மலை பாதையில் உருண்ட பாறைகள்
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலைக்கு செல்லும் பாதையில் 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இங்கு நேற்று கனமழை பெய்த நிலையில் 2வது வளைவு மலைப்பாதையில் பாறைகள் திடீரென உருண்டு விழுந்தன. 


Tags : Kollid , 5,000 stranded in Kollid villages rescued by boats: farmland turned into sea
× RELATED கொள்ளிடம் அருகே கோழி குஞ்சை விழுங்கிய நல்லபாம்பு பிடிபட்டது