×

திருநீர்மலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படுமா? பேரவையில் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி கேள்வி

தாம்பரம்: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின்போது, பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி கேள்விக்கு, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அளித்த பதில் வருமாறு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு: திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில் 108 திவ்யதேசங்களில் 61வது திவ்யதேசமாக கருதப்படுகிறது. 180 படிக்கட்டுகளை கொண்ட இந்த கோயிலில் வயது முதிர்ந்தவர்கள், உடல்நலம் குன்றியவர்கள் படிகளில் ஏறி சுவாமி தரிசனம் செய்ய கடினமாக இருக்கிற சூழ்நிலை கருதி, 2021-22ம் ஆண்டு மானிய கோரிக்கையில் முதல்வர் இதற்கு ரோப் கார் அமைப்பதற்கு வலியுறுத்தி அறிவிப்பு வெளியிடச் செய்தார். அதன் தொடர்ச்சியாக, சாத்திய கூறுகள் ஆராயப்பட்டு ரூ. 8 கோடியே 17 லட்சம் செலவில் கருத்துரு தயாரிக்கப்பட்டு அதற்கு உண்டான அடிப்படை தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுகின்ற வகையில் வெகு விரைவில் டெண்டர் போடப்பட்டு அந்த ரோப் கார் அமைக்கின்ற பணி அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதத்தில் துவக்கப்படும்.

எம்எல்ஏ இ.கருணாநிதி: பல்லாவரம் பகுதியில் மிகவும் ஏழை எளிய மக்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள். மாணவ, மாணவிகள் அரசு பள்ளிகளில் படித்து விட்டு மேல் படிப்பு தொடர தனியார் கல்லூரிகளில் கட்டணம் மிக அதிகமாக உள்ளதால் அங்கே கல்வி பெற முடியாமல் சிரமப்படுகிறார்கள். மாணவ செல்வங்கள் உயர்கல்வியை மேற்கொள்ள அறிவியல் மற்றும் கலைக்கல்லூரியை திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலுக்கு சொந்தமான சர்வே எண்: 73ல் இருந்து 86 வரை 16.6 ஏக்கர் நிலம் உள்ளது. எனவே காலியான நிலத்தில், பொதுவாக தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர், பல்லாவரம் ஆகிய பகுதிகளுக்கும் மையப்பகுதியாக இருப்பதால் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அந்த இடத்தில் முதலமைச்சர் கேட்ட 10 கோரிக்கைகளில் ஒன்றாக இதை நினைத்து அங்கே கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படுமா? ஜமீன் பல்லாவரம் சீனிவாச பெருமாள் கோயில், அஸ்தினாபுரம் பிரசன்ன பகுதி ஆஞ்சநேயர் கோயிலுக்கு திருப்பணி எடுத்துக் கொள்ளப்படுமா என அறிய விரும்புகிறேன்.

அமைச்சர் பி.கே.சேகர்பாபு: சட்டமன்ற உறுப்பினர் குறிப்பிட்ட ஜமீன் பல்லாவரம் கோயில் என்பது தற்போது திருப்பணிக்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆஞ்சநேயர் கோயில் என்பது 1984ம் ஆண்டு திருப்பணிக்கு பிறகு அந்த கோயில் திருப்பணிக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதுவும் கூடிய விரைவில் திருப்பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வல்லுனர் குழு ஆய்வறிக்கையோடு உடனடியாக அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். தமிழக முதல்வர் நல் எண்ணத்தோடு 2021-22ம் ஆண்டு பத்து கல்லூரிகளை அறிவிக்க செய்தார்.

அதில் நான்கு கல்லூரிகளை துவக்கி விட்டோம். மீதம் இருக்கின்ற ஆறு கல்லூரிகளுக்கு நல் மனம் கொண்டவர்கள் நீதிமன்றம் சென்றிருக்கிறார்கள். அந்த கல்லூரிகள் வந்து விடக்கூடாது என்பதற்காக, இருந்தாலும் அதில் சட்டப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறோம். நான்கு கல்லூரிகளுக்கு தடை இல்லை என்று நீதிமன்றத்திலே உத்தரவு பெற்று, நான்கு கல்லூரிகள் தற்காலிக கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மீதம் இருக்கின்ற ஆறு கல்லூரிகளுக்கு நீண்ட நெடிய சட்டப் போராட்டம் நடத்தி நிச்சயம் அறிவிக்கப்பட்ட அந்த 10 கல்லூரிகளையும் கொண்டு வருவதற்கு முதல்வர் முயற்சி செய்வார். அது முடிந்த பிறகு சட்டமன்ற உறுப்பினருடைய கோரிக்கை பரிசீலிக்கப்படும்.

Tags : Tiruneermalai ,Pallavaram ,MLA ,E. Karunanidhi , Will Government Arts and Science College be set up in Tiruneermalai? Pallavaram MLA E. Karunanidhi's question in the assembly
× RELATED செங்கல்பட்டில் அனைத்து கட்சி...